Saturday, October 31, 2009

தமிழ் படங்களின் பாதை...

நீண்ட நாட்களாய் எண்ணி பார்த்திருக்கிறேன். இன்றுதான் எழுத வேண்டும் என்று தோன்றியது. தமிழ் படங்கள் என்பது அன்று முதல் இன்று வரை வியாபார ரீதியில் மட்டுமே தம் பயணப் பாதையையும் தளத்தையும் அமைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அறிவியலின் பரிசாக அளிக்கப்பட்ட திரைப்பட நுண்மைகள் முதலில் கலையின் வெளிப்பாட்டாக நினைவுகளை கொண்டு வர முயன்றது ஒரு கட்டாயப் பண்பு என்ற உண்மை பின் மக்களை வசிகரப் படுத்திய தன்மை எல்லாம் கலையின் வடிவுடன் வியாபார சந்தையாகவும் மாறிவிட்டது என்பதை சற்று அமைதியாக பின்னோக்கினால் விளங்கும்.

உலகப் படங்கள் என்ற விஸ்தாரத்தில் சமூக அக்கறையுடன் எடுக்கப்படும் படங்களுக்கென்று மிகச் சிறிய அளவே இடம் உள்ளது என்பது அப்பட்டமான உண்மை. திரைப்படக் கலையை அடிப்படையாக வைத்து எதை சொல்ல விரும்புகிறோம் என்று கேள்விகள் கேட்டு இயங்கும் பல கலார்விகளில் 90% ஒரு வியாபார அளவிலான கதைகளை மையமாக வைத்தே தம் முயற்சிகளை செய்கிறார்கள். அவர்களின் திறமைகளை பற்றியோ, அவர்களின் கலை வெளிப்பாட்டு உணர்வை பற்றியோ நாம் சிந்திக்க வில்லை. தமிழ் படங்களில் வித்தியாசமான முறையில் தம் கலை உணர்வுகளை சொல்லக் கூடிய இயக்குனர்கள் என்றும், வித்தியாசமான அணுகுமுறை என்றும் உலகளாவில் பேசப்படும் அளவில் படங்கள் எடுக்கப் படவில்லை என்பதே என் சிந்தனை...

சிற்சில முயற்சிகளை எடுத்து தம் வியாபார நோக்கில் தயாரித்த படங்களில் சில வித்தியாசங்களை, பாலச்சந்தர், பாரதி ராஜா, மகேந்திரன், ஞான சேகரன், கே.ஷங்கர், மணி ரத்னம், வசந்த், தங்கர் பச்சான் போன்றவர்கள் அளித்திருந்தாலும், மாறுபட்ட முயற்சிகளுக்கென்று பிரத்யேகமாய் எந்த ஒரு இயக்குனரும் வரவில்லை. தனித்துவம் என்ற அடிப்படையில் சினிமாவை ஒரு கலை வெளிப்பாட்டு ஊடகமாய் வித்தியாசமான முயற்சிகளை செய்ய சத்யஜித் ரே, மிர்னாள் சென், அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன் போன்ற இயக்குனர்கள் தமிழில் இல்லை என்று சொல்ல விழைகிறேன்.

கோடார்ட் போன்ற தீவிர முயற்சிகளில் நம் பாங்கு வெளிப்படுமா என்று தெரியவில்லை ஆனால் சினிமாவை ஓர் சோதனைச் சாலையாய் மாற்றி, நிதர்சனத்துடன் தம் கற்பனை கலந்து தர பெருமளவில் தேவைப்படும் தைரியம் இயக்குனர்களுக்கோ, தயாரிப்பாளர்களுக்கோ இதுவரை இல்லை என்ற உண்மையையும் நாம் நோக்க வேண்டும்.


சாத்தியம் இல்லை என்று பாழுனர்வுடன் நான் எதிர்மறையாய் பேசவில்லை. என்று வரும், யார் செய்வார் என்ற எண்ணங்களை சற்றே மனதில் கொண்டு புதுமை உணர்வுகளுடன் தமிழ் திரைப்படம் செல்ல வேண்டிய ஒரு பாதை வேண்டும் என்ற நோக்கத்தை சொல்ல விழைகிறேன்...


உலக அரங்கில் தன்த்துவம் வாய்ந்த படைப்புகளுக்கான அரங்கத்தில் நமது தமிழ் படமும் வெளிவரும் நாளை எதிர்பார்த்து ஏங்கும் உள்ளங்களில் நானும் ஒருவனாய் உள்ளேன் என்றே கூறிக்கொள்கிறேன்!


வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் இயக்குனர்கள்! வருக தமிழ் தனித்துவப் படங்கள்!
:-) முகில்.

Sunday, October 4, 2009

கந்தசாமி அப்பட்டமான அந்நியத்தனம்!

விக்ரம் பல நாட்க்களுக்குப் பின் அவர் பாணியில் வந்துள்ளார் என்பது ஓகே. ஆனால் விக்ரமுடைய சுய விலாசங்களில் இருந்து மீண்டு ஒரு படி மேலே சென்று ஒரு பண்பட்ட நடிகனாய் அவரைக் காண முடியவில்லை. அது கதையும் இயக்குனரும், தான் மறுபடியும் ஒரு தோல்வியை தழுவத் தயாராக இல்லை என்று அச்சம் கொண்ட விக்ரமுமாக முக்கோணக் கிரியையாய் கந்தசாமி உருவெடுக்க காரணம் என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். விக்ரம் தன் நடிப்பில் கூட அப்படியே அந்நியத்தனத்தை காட்டியிருக்கிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விக்ரமின் நடிப்பாற்றல் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது இங்கு எதிர்பார்த்த சூட்டைத் தரவில்லை.

சுசி கணேசன் அவர்கள் என்ன வித்தியாசமாக செய்திருக்கிறார் என்றால் எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் சமீப காலங்களில் விக்ரம் படங்கள் தழுவிய தோல்வியில் இருந்து அவரைக் காப்பாற்றி கொண்டுவந்து ஒரு வெற்றிப் படத்தை கொடுத்த ஒரு பெரும் வித்தியாசத்தை செய்துள்ளது ஒரு திறமைதான். மெகா பட்ஜெட் படத்தினை வியாபார அளவில் வெற்றி பெறவைத்ததை தவிர படத்தில் வித்தியாசங்கள் ஏதும் இல்லை.


கம்ப்யூட்டர் மூலமாக புகார் சேகரித்த கதா நாயகன் மரத்தில் கோர்த்த மக்கள் புகார் சீட்டுகளின் வலியைத்த் தீர்க்க முயல்கிறார் கந்த சாமியாக...


சண்டை காட்சிகளின் இயக்கம் நன்றாக உள்ளது. கிராபிக்ஸ் மற்றும் சண்டைக் கோர்ப்பு பார்க்கும் விதத்தில் இருந்தது.


நல்ல மசாலா அரைத்து தந்த ஒரு சமையல் கூடத்தை பார்க்க முடிகிறது! மசாலாவின் மனம் பரவாயில்லை என்றே கூற முடியும்!


கந்தசாமி கொக்கரித்த சத்தம் நம்மை எழுப்ப வில்லை என்றாலும் சேவல் கூவி விட்டது என்று அறிந்து கொள்ள முடிகிறது!


முகில்

Friday, September 18, 2009

பொக்கிஷம் சேரனின் கலா முனைவு...


சேரன் உணர்வுகளின் மூலம் தன்னை நிலை நிறுத்தவும் வியாபார ரீதியாக வெல்லவும் செய்த முயற்சிகளில் ஒன்று இந்த பொக்கிஷமா என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு இயக்குனர் என்ற முறையில் தன்னையும் தனக்கு முதலீடு செய்த தயாரிப்பாளரையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஒரு புறமிருக்க கதையையும் கலா வெளிப்பாட்டு உணர்வுகளையும் சொல்ல வேண்டிய ஆதங்கமும் மற்றொரு புறத்தில் அவரை மிகவும் உந்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


நெஞ்சில் காதல் எப்படி தோன்றும் என்பதற்கு ஒரு நட்பு கூடக் காரணமாய் இருக்கலாம் என்று கடிதப் பரிமாற்றங்களின் ஸ்பரிசமாய் இந்தக் காதல் தோன்றுகிறது. மதத்திற்கும், மனித வாழ்க்கை சார்ந்த கலாச்சார, மதப் பாதிப்புகளுக்கு அப்பாற்ப்பட்டதாய் பூக்கும் ஒரு காதலை சொல்லிய விதம் மனதை சென்று அடைந்தாலும் கதையின் பின்னணியில் ஏதோ ஒரு சுகம் இல்லாத வியாபார தன்மையும் தெரிந்தது.


சேரன் இந்தப் படத்தை எவ்வளவு கோடியில் முடித்தார் என்பது தெரியவில்லை, ஆனால் இதற்க்கு கமர்சியல் அணுகுமுறை தேவை இல்லை என்றே நான் எண்ணுகிறேன். பாடல்கள் கூட அதிகம் தேவை இல்லை. உணர்வுகளை தொடும் கதையிழைப் பாடல்கள் சரி ஆனால் ஒரு படி மேலே செல்வது போல் சென்று ரசிகர்கள் எதிர் பார்ப்பார்கள் என்ற கற்பனை வடிவ பாடல்கள் வேண்டாம் என்று எண்ணினேன்.


நவ்யா நாயரிடம் நடிப்பை வாங்கிய அளவு சேரன் தன்னையும் சற்றே வேறு வடிவப்படுத்தி நடிப்பையும் கொஞ்சம் வித்தியாசமாய் கொடுத்திருக்கலாம். அவரது கதா பாத்திரத்தின் அஸ்திவாரத்தையே இன்னும் கொஞ்சம் மாற்றி இருக்கலாம். உருவத்தையும் கூட.


சமீபமாய் வந்த தொலைக்காட்சி பேட்டியில் தயாரிப்பாளர்களின் வற்புறுத்தலால்தான் தான் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டதாய் சொன்னார். உண்மையில் இந்தக் கதா பாத்திரத்தில் அவர் புது முகத்தை அறிமுகப் படுத்தி இருந்தால் படம் இன்னும் வேறு பாதிப்பை மனதில் ஏற்ப்படுத்தி இருக்கும் என்றும் கூட சொல்வேன்.


பின்னணி இசை இருந்த அளவு பாடல்கள் மனதில் நிற்க வில்லை. சபேஷ் - முரளி தனது பாடல்களை வானத்தில் இருந்து பார்க்கும் ஒரு வித்தியாசமான முறையில் பார்த்து தமக்கென்ற ஒரு பாணியை நிலை நாட்டினால்தான் நலம் என எண்ணத் தோன்றுகிறது.


கதை, கதா பாத்திரங்கள் நன்றாக மனதில் நிற்கிறது. பார்ப்பதற்கு ஒரு மென்மையான படமாய் படுகிறது. சேரத்தனம் என்ற முத்திரை அவ்வளவாக தெரியவில்லை. இப்படித்தான் இருக்கும் என்ற பழக்கத்திற்கு ஆளான ஓர் தன்மையே தெரிகிறது. சேரன் தொடர்ந்து நல்ல கதைகளை கொடுக்க முயற்சிப்பதும், நல்ல இயக்குனராய் பணியாற்ற முயற்சிப்பதும், தமிழ் திரைப்படங்களுக்கு நன்று. பக்கா கமர்சியல் படங்களுக்கு குருவாய் இருந்த்த ரவிக்குமாரின் சிஷ்யன் மனதின் ஸ்பரிசங்களை சித்திரமாய் ஆக்க முயற்சிப்பது தன்னுள் இருக்கும் ஒரு வித்தியாசமான கலைஞனை மக்களுக்கு அறிமுகப் படுத்துகிறது.


சமீப காலங்களில் தமிழ் திரைப்படம் தனக்கென்று ஒரு பாணியை கைப்பற்றும் கலைஞர்களின் அணிவகுப்பை பார்க்கிற பெருமை ஏற்ப்பட்டுள்ளது. திரைப்படங்கள் கலையின் விஸ்தாரமாய் வரும் ஒரு புதிய பரிணாமம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் நாம் இன்னும் எவ்வளவோ தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை நமது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நல்ல சினிமா ரசிகர்கள் எல்லோரும் அறிவார்கள்.


முயற்சி திருவினையாக்கும் என்பது பொய் இல்லையே!


பொக்கிஷம் காதல் என்ற உணர்வை இதயத்தில் எப்போதும் சுகந்தமாய் வீசும்!

நன்று திரு.

சேரன்... முயல்க இன்னும்!


முகில்

Friday, June 26, 2009

ராமசாமி நல்லமுத்துப்பிள்ளை சொல்கிறார்..

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்....ஒரு சாதாரண படமாக இருக்குமென்று இப்படத்தை பார்க்கத்துவங்கினேன்...கதை களம் ஒரு அழகான கடற்கரை சிற்றூர் முட்டம். அங்கே புதிதாக வரும் துளசிக்கும், அதே ஊரில் வசிக்கும் (நம்ம)கூச்சான் இவர்களிடையே வரும் நட்பு, காதலென தொடர்கிறது கதை.படத்தின் தொடக்கத்திலேயே ஏதோ ஒரு சோகம் நிகழ்ந்த அறிகுறிகள், வேண்டியவர்களுக்கு, சொல்லி அனுப்பியாகிவிட்டது, அவர்களுக்கு காத்திருக்கும் வேளையில்,நடந்தவற்றை நினைக்கிறான் ஒருவன்.வழக்கமான இளங்காதலர் இடையே வரும் நட்பு,கோபம்,விளையாட்டு என படம் அமைந்திருந்தாலும் அதை வித்தியாசமாக, ஏற்றுக்கொள்ளக்கூடிய விதமாக,நம்மைக்கவரக்கூடிய விதமாக,சிறு தொய்வும் இல்லாமல்,விரசம் இல்லாமல்,மிக எதார்த்தமாக பாமர மக்கள் மட்டுமன்றிDowntown மக்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் மிகச்சிறப்பாக இப்படத்தை எடுத்துள்ள டைரக்டர் ராஜ் மோகனுக்கு ஒரு சபாஷ்! பாரதி ராஜாவைவிட ஒரு படி மிஞ்சிவிட்டார் எனவும் சொலலாம்.அறிமுக நடிகர்கள் என்று தெரியாத அளவுக்கு நடிப்பும், இளவயதிற்கு ஏற்ற அறியாமையும், பின்னே முதிர்ச்சியையும் காட்டியுள்ள மிக இயல்பான நடிப்புக்கு பல ஓ.. போடலாம்! போடுங்களேன்!இப்படத்தின் இன்னொரு சிறப்பு முன்னணி நடிகர்கள் யாரும் இல்லாதிருப்பது. மிகை நடிப்பு சற்றும் இல்லாமல் அழுத்தமான கதையுடன் கூடியபடம். 16 வயதினிலே படத்திற்குப்பிறகு வந்திருக்கும் அருமையான படம்.துளசி-ஆர்ப்பாட்டம் இல்லாத மயக்கும் அழகுமுட்டத்து பக்கத்துல பாடல்... சூப்பர்.டைரக்டருக்கு என் நன்றி: படத்துல உண்மைத்தமிழர்களை நடிக்க வைத்தது.பி:கு= ரசணை என்பது ஆளாளுக்கு வேறுபடும். இங்கே எனது ரசணையை பிரதிபலித்திருக்கிறேன். நன்றி

Sunday, June 21, 2009

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்...

காதலுக்கும் வாழ்க்கைக்கும் நடக்கும் போராட்டத்தின் வலி நெஞ்சை உருக வைக்கிறது ராஜ மோகன்! ஒரு திரைப்படம் மூலமாக உங்கள் உணர்வுகளை முடிந்த வரை களங்கம் இல்லாமல் சொல்ல முயற்சித்ததற்கு முதற்க்கண் நன்றி. கதா நாயகர்களாய் பாத்திரங்களின் சொருபங்களை இயற்கையான வழி முறையில் கிராமத்தில் பார்க்கக் கூடிய சராசரி முகங்களை தேர்ந்தெடுத்து கதைக்கு பலம் சேர்த்த முயற்சிக்கும் வாழ்த்துக்கள். இந்த மாதிரி முயற்சிக்கும் ஊக்கம் கொடுத்து உங்கள் குழுவிற்கு இப்படத்தை உருவாக்க உதவி செய்த திரு S.P.B குடும்பத்திற்கு பாராட்டுக்கள்.

ஒவ்வொரு மனித வாழ்விலும் உள்ள சோகங்கள் எல்லாம் நமது நடை முறை வாழ்வில் வருந்தி மறந்து விடுவதுதான். ஆனால் காதல் தோல்வியும், அதனால் ஒரு எதிர் காலத்தையே இழந்து விடும் துர்பாக்கியமும் பெரும் வழியையும் வடுவையும் ஏற்ப்படுத்தி விடுவது என்பது உங்கள் படத்தின் மூலம் சொல்லப் பட்டிருகிறதை அது சொல்லப் பட்ட விதத்தை பாராட்டாமல் இருக்க இயலாது.


முட்டத்திலும், தூத்துக்குடியிலுமாய் வாழ்க்கையை தத்ரூபமாய் காட்டி உள்ளீர்கள். நீர் அந்த ஊரை சேர்ந்தவரோ என்று கூட எண்ணம் வருகிறது. ஒரு நல்ல எதிர் காலத்தை அமைத்துக் கொள்ள இயலாமல் துளசி போன்ற இளம் பெண்கள் வாழ்க்கையின் அகோரப் பிடிகளில் சிக்கி எப்படியெல்லாம் கருகிப் போகிறார்கள் என்ற ஒரு வலியே என் இதயத்தில் ஓர் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. கூச்சன், துளசியின் கொச்சை இல்லாத காதல், மனதை இளக்கியது.


அந்த சில முத்தக் காட்சிகளை கூட நீங்கள் தவிர்த்திருக்கலாம். எனென்றால் உங்கள் கதையின் பின்னணியில் உள்ள அழகே போதுமானதாய் இருந்திருக்கும்.


சித்தார்த்தின் படப்பிடிப்பு, படத் தொகுப்பாளரின் கை வண்ணம், யுவன் இசைஅமைப்பு, எல்லாம் படத்திற்கு வேண்டிய அளவு நல்ல முயற்சிகளாய் இருந்தது. யுவனின் பின்னணி இசை மிகவும் அழகாக சில இடங்களில் உதவியுள்ளது .


சில மாற்றங்களை கதையில் செய்திருக்கலாம்.


  1. எந்தப் பிரச்சனை என்றாலும் வாய் திறக்காமல் இருக்கும் கிராமக் கூட்டம். அது பொதுவாய் அப்படி இருக்காது.

  2. தர்மன் கதா பாத்திரத்திற்கு உள்ள பாடல்.

  3. ஒரு நாள் முழுக்க முட்டம் பஸ் ஸ்டாண்டில் இருக்கும் துளசி மற்றும் பாட்டிக்கு ஒரு கிராமத்து ஜனம் கூடவா கூச்சன் விபத்து பற்றி சொல்லாமல் விட்டிருக்கும்?

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் என்ற தலைப்பிற்கு என்ன காரணம் என்று தெரிய வில்லை. ஒரு உண்மை சம்பவம் நடக்கும் இடத்தில் இருந்தது போன்ற ஒரு உணர்வை உங்கள் படம் கொடுத்தது. சில படங்கள்தான் மனதில் ஓர் திருப்தியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். உங்கள் படம் என் மனதை உண்மையில் தாக்கி ஒரு வலியையும் ஏற்படுத்தியது. ஒரு கலைஞனின் படைப்பு ஓர் உள்ளத்தை சென்றடையும் விதம் அக்கலைக்க்கு பெருமை சேர்க்கும். அவ்வழியில் உங்களுக்கும், உங்களுடன் பணி புரிந்து உங்கள் படைப்பிற்கு உருவம் அளித்த குழுவிற்கும் வாழ்த்துக்கள். வெல்ல வாழ்த்துக்கள். நற்ப் படங்களை மேலும் படைத்திட வாழ்த்துக்கள்.


முகில்

Thursday, June 4, 2009

வண்ணத்துப் பூச்சியாரை வரவேற்கிறேன்..

அன்பு நண்பர் சூர்யா அவர்களே:

எமது வலைக்கு வருகை தந்து நல் உள்ளப் பரிமாற்றங்களை எமக்கும் மற்ற அன்பர்களுக்கும் தரவிருப்பமைக்கு நன்றி. உங்கள் நண்பர்களுக்கும் இந்த வலை பற்றி அறிவித்து, அவர்களின் என்ன ஓட்டங்களையும் ஊட்டங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்வு. உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!

முகில்

வண்ணத்து பூச்சியார் சூர்யா அவர்களின் அறிமுக எழுத்து இங்கே:

"உங்கள் வலைக்கு இதுவே என் முதல் வருகை. நண்பர் தாயுமானவன் மூலம் தங்கள் வலை பற்றி அறிந்தேன். தங்கள் சினிமா ஆர்வமும் ஆதங்கமும் சிறப்பு. உலக சினிமா பற்றிய எனது வலை பூ பார்க்கவும். நிறை / குறை கூறவும். வாழ்த்துகள்" சூர்யா

Monday, May 18, 2009

அயன் ஒரு கமர்ஷியல் பொழுது போக்கு!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா-தமன்னா நடித்து வெளி வந்திருக்கும் அயன் தமிழ் சினிமாவின் ஹை-டெக் மசாலா. இளவட்டங்களைக் கவர்நதால் வெற்றிக் கனி கிட்டாமலா போய் விடும் என்ற ஒரு சூத்திரத்தை நன்றாக உபயோகப் படுத்தி தம் வெற்றியை வியாபார ரீதியாக தக்க வைத்துக் கொண்டுள்ள இயக்குனருக்கு வாழ்த்துக்கள் சொன்னாலும், அவர் கதா நாயகனை தேர்ந்தெடுத்த கதா பாத்திர ஸ்தானம் இளம் நெஞ்சங்களுக்கு நாம் எதைச் செய்தாலும் ஓகே என்றொரு மனப்பக்குவத்தை கொடுக்க கூடியதாய் உள்ளது.

தேவா என்ற பாத்திரத்தில் இயங்கும் சூர்யா ஒரு கடத்தல் மன்னன். சுங்க இலாகா அதிகாரிகள், எதிரிகள், மற்ற கடத்தல் கூட்ட அடியாட்கள் கண்களில் மண்ணை தூவி விட்டு கடத்தல் தொழிலில் ஒரு சூப்பர் ஏஜென்டாக பிரபுவிடம் வேலை செய்கிறார். ஒரு கம்ப்யூட்டர் பட்டதாரியான அவர், இப்படி ஒரு கடத்தல் தொழில் செய்வது மக்களுக்கு அதுவும் இளைஞர்களுக்கு கெட்ட எண்ணங்களை விதைக்கும் வித்து போல் இருக்கிறது. இயக்குனர் கே.வி.ஆனந்த் இந்த ஒரு விஷயத்தை மாற்றி இருந்திருக்கலாம். நல்ல எண்ணமுள்ள தேவாவாக வரும் சூர்யா செய்யும் தொழில் தெரிந்தும் அவரைக் காதலிக்கிறரா தமன்னா என்று கேட்க்க தோன்றினாலும் அதை பட்டும் படாமலும் கொண்டு சென்று விட்டார் இயக்குனர்.


வழக்கமான மசாலா கதையை தொழில் நுட்ப மேம்பாட்டுடன் பவ்யமாக செய்யக் கூடிய வித்தைகள் தமிழ்ப் படங்களில் வந்து ஜாலம் காட்டிக் கொண்டிருக்கும் புதிய தமிழ்ப் படங்களில் அயன் இன்னோன்றே தவிர, சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் எதுவும் கதா பாத்திரங்கள் மூலமாகவோ, கதையின் மூலமாகவோ சொல்லப் படவில்லை, சொல்லவும் முடியாது. படத்தின் கருத்தே அப்படி என்றால் இதில் சிறப்பாக சொல்ல என்ன இருக்கிறது?


ஹீரோயிசம் என்ற பழைய படங்களின் நல்ல கதா நாயகர்கள் காணமல் போய் தற்கால கதா நாயகர்கள் திருடர்களாய், கடத்தல் காரர்களாய், கொலை காரர்களாய் தொடர்ந்து வந்தாலும், பொழுது போக்கு என்று எண்ணப்படும், சொல்லப்படும் விஷயங்கள் கொஞ்சம் விஷத்தையும் சில உள்ளங்களில் கலந்தால் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை.


திரைப்படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் சிரத்தையுடன் நல்ல முயற்சி செய்திருக்கின்றனர். M.S. பிரபுவின் ஒளிப்பதிவு ஏற்கனவே நல்ல ஒளிப்பதிவாலராய் இருந்த கே.வி. ஆனந்துடன் சேர்ந்து நல் வடிவு தருகிறது. கலை இயக்கம், சண்டைக் காட்சிகள் இயக்கம், நடனம் என்ற புது முயற்சிகள் நன்குள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை மிகவும் ரசிக்கும் படியில் இருக்கிறது. பாடல்கள் ஏற்கனவே எல்லோர் வாயிலும் முனுமுனுக்கப்பட்டு டாப் 10-ல் உள்ளது.


அயன் என்ற பெயர்காரணம் பற்றி யாரவது சொன்னால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் ion என்று சொல்வது ஒரு அணுசக்தியின் சேர்க்கை ரூபம் என்று பொருள் கொள்ளலாம். அதுதான் இயக்குனரும் சொல்ல வருகிறாரா என்று யூகிக்கிறேன். மொத்தத்தில் அயன் 6/10 மார்க் பெறுகிறது.

திரு ராமசாமி நல்லமுத்துப்பிள்ளை Rs.500 பரிசு பெறும் எழுத்தாளர்!

நல்ல முனைவு, தம் ரசனைகளை வெளிப்படுத்தும் எண்ணம், எழுத்தின் மூலமாக தம் எண்ணங்களை கொண்டு வரும் உணர்வு, தமிழ் படங்கள் பற்றிய உயர்ந்த கருத்துக்களை கொண்டு வரும் உத்வேகம் இது நல்ல ரசிகர்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஊக்கதொகையாய் பரிசுகள் கொடுத்து tamilfilmcritic blogspot (www.tamilfilmcritic.blogspot.com) பணி புரிகிறது. எமது வேண்டுகோளுக்கு கவனம் காட்டிய ஒரே ஒரு ரசிகராய் இருந்தாலும், வெண்ணிலா கபடி குழு படத்திற்கும் மற்ற படங்களுக்கும் கருத்துக்களை எழுதிய திரு. ராமசாமி அவர்களின் அந்த முனைவிற்க்கும் அவர் தந்த எழுத்திற்கும் நன்றி கூறி அவருக்கு ரூபாய் 500 பரிசாக வழங்கப்படுகிறது. உங்கள் யாவரையும் தமிழ் படங்கள் பற்றிய கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை எழுதுவதில் பங்கெடுக்கும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முகில்

Sunday, April 26, 2009

A.R. ரஹ்மான் தொட்டிருக்கும் இமயம்

ஆஸ்கர் விருது திரைப்பட வட்டாரங்களில் மிகப் பெரியதாக சொல்லப்படும் ஒரு சிகரம். இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு ஆஸ்கர் வாங்கி வந்திருக்கும் A.R ரஹ்மானைப் பாராட்டாத உள்ளங்கள் இருக்க இயலாது. அவரை திலிப் என்ற பெயரில் ஒரு சில விளம்பரப் படங்களின் தயாரிப்பின் போது பார்த்த போதே அவருள் ஒரு சிந்தனை ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஏன் இந்திய மற்றும் உலக திரைப்பட வரலாற்றில் கூட A.R. ரஹ்மான் பெயர் பொறிக்கப்பட்டது இந்தியர்கள் பலர் பெருமைப் பட்ட விஷயம். அவர் ஒரு தமிழர் என்கிற போது தமிழ் நாட்டு மக்களுக்கு, தன் வீட்டுப் பிள்ளை ஒரு பெரிய விருதை வாங்கி வந்தது போல் பெருமை என்றால் அது மிகையாகாது.

இசைக்கு ஏது மொழி என்பதை கோடம்பாக்கத்தில் இருந்து சென்று, ஹாலிவுட் இசை நிபுணர்களை சற்றே திரும்பி பார்க்க வைத்துள்ளார் நமது ரஹ்மான். இந்தியாவை ஒட்டி உள்ள ஒரு கதை என்பதால் ரஹ்மான் ஓகே என்று சிலர் எண்ணினாலும், இனி ஹாலிவுட்-ம் ரஹ்மானை அழைத்து தக்க வைத்துக் கொள்ளும் நாள் தூரத்தில் இல்லை.


இசை வரலாற்றில் தனக்கென்று ஒரு பாணியை வளர்த்துக் கொண்டவர்கள் எவ்வளவோ பேர் உண்டு என்றாலும் உலகளாவிய வகையில் இசை இமாலய சிகரத்தில் ஏறிய இந்திய இசைக் கலைஞனாய், இசை வானில் என்றும் மறக்க முடியாத துருவ நட்சத்திரமாய் ஒளி வீசும் A.R. ரஹ்மான் மேன் மேலும் சிறப்பு பெற வாழ்த்துகிறோம்.


A.R. ரஹ்மான் இட்டிருக்கும் இந்த வித்து இனி அவர் போல் பலரும் பயணம் செய்ய காத்திருக்கும் பலருக்கு ஒரு ஞான விருச்சமாய் நிழல் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது....


ஜெய் ஹோ ரஹ்மான்!


முகில்

Monday, April 20, 2009

வெண்ணிலா கபடி குழு ...மெல்லிய உணர்விழை

சராசரி வாழக்கையின் உன்னதங்களின் ஒரு பொலிவு வெண்ணிலா கபடி குழு. இயல்பான போக்கில் செல்லும் வாழ்க்கையில் உள்ள சிறந்த உணர்வு பரிமாற்றங்களை தான் உணர்ந்த விதத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

எல்லா வாழ்க்கையிலும் இழை போல் ஓடும் காதல், அது செய்யும் மாயம், உணர்வுகளின் புனிதம் என்று ஒரு அழகான கொச்சை படுத்தாத காதலாய் மாரியின் காதல். திருவிழாவிற்காக வரும் கதா நாயகி முதல் முதல் பார்த்து விரும்பிய ஒருவனை காதலனாக ஏற்கிறாள். சில நாட்களே அந்த கிராமத்தில் இருந்து விட்டு தன் காதலனை விட்டு செல்கிறாள். மறு முறை திருவிழாவிற்கு வரும் போது சந்திக்கலாம் என்று இதயத்தின் பரி பாஷைகளுடன் சென்றவள் மறுபடி வருகிறாள். காதலனை தேடுகிறாள். காதலன் இறந்து போன விஷயம் தெரியாமல் கலக்கத்துடன், குழப்பத்துடன் ஒவ்வொரு இடமாய் தேடி அவனைக் காணாமல் ஊர் திரும்பும் போது கல்லான மனதிலும் கண்ணீர் வரும்.

காதலின் புணிதமான தேடலாய் இந்த இளம் காதல் வரும் போதெல்லாம் வயதானவர்களை கூட தம் வாழ்வின் பழைய நாட்களுக்கு சென்று தாம் செய்த முதற் காதலின் புணிதத்தை உணரும் அளவிற்கு ஒரு வெளிப்பாடு இந்த காதலின் மூலம் வருகிறது .

பழனியில் வாழும் மாரி, மதுரை சென்றும் தன் காதலியை காணாமல் கபடியில் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து கொள்வது சோகமான விஷயம். இது உண்மையில் நடந்ததா சுசீந்திரன் அவர்களே? இல்லை just கற்பனையா?

கபடிதான் கதை என்றாலும், கபடி ஆடும் அந்த ஊர் வாலிபர்கள் மத்தியில் உள்ள சமூக சாயங்கள், எப்படியாவது செயிச்சு போடனுமுடே என்ற வேகம், தோற்றுக்கொண்டே வரும் அவர்களை ஏசும் கிராமம், மக்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கைகள், சாதி உணர்வின் குழப்பங்கள் என்று பல விஷயங்களையும் கதா பாத்திரங்கள் செல்லும் இயல்பு வாழ்க்கை மூலமாக சொல்கிறது வெண்ணிலா கபடி குழு.


இந்த மாதிரிப் படங்கள் தமிழ் பட முத்திரைகள் என்று சொல்லலாம். தமிழ் படங்களுக்கே உரித்தான பாடல், சண்டை இருந்தாலும், கதையோடு ஒட்டி போய் சொல்லும் போது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்.

சொல்லப்படும் கருத்து, கதையின் அமைப்பு, இந்த team work என்ற மந்திரம், தாம் சொல்ல வந்ததை அழகாக சொல்லும் பாங்கு என்று வெண்ணிலா கபடி குழு நன்றாக மனதுடன் விளையாடுகிறது.

செல்வ கணேஷ்-ன் இசை கதையுடன் இசைப்பது நன்று. கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் செவ்வனே பணியாற்றியுள்ளனர். வழக்கமான SFX filter முயற்சிகளை குறைத்து, காண்பதை நன்றாக படமாக முயற்சி செய்தது நன்று.

சுசீந்திரன் ஒரு நல்ல திரைப்படத்தின் மூலம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவரின் திரைப்பயணம் நல்ல முறையில் அமைய வாழ்த்துவதுடன், தன் பயணத்தின் மைல் கற்களாய் நல்ல கருத்துள்ள திரைப்படங்களையே அவர் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுவதுடன் அன்பு ஆணையும் இடுகிறோம்....

வெண்ணிலா கபடி குழுவுக்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

முகில்

Friday, April 17, 2009

தரமான தமிழ் சினிமா


சினிமா பொதுவாக நம் எல்லோர் மனதையும் கவரும் கனவு வாழ்க்கை. குறைந்த பட்சம் 80 % மக்கள் சினிமாவை தம் வாழ்க்கையோடு இணைத்து கொண்டவர்கள். சிலருக்கு சினிமாவே வாழ்க்கை. சிலருக்கு அது ஒரு வழிகாட்டி. சிலருக்கு பாடம். சிலருக்கு ஜஸ்ட் பொழுதுபோக்கு . சினிமா இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று கூட கேட்கத் தோன்றும். மனிதர்கள் போல் சினிமாவும் வெவ்வேறு விதங்களாய் வருகிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனித மனங்களை கவரும் இந்த கலை மிக அற்புதமானது. எத்தனையோ கலை வடிவங்கள் இருந்தாலும், சினிமா ஒன்று மட்டும் எல்லாக் கலை வடிவங்களையும் உள்ளடக்கிய ஒரு பெருங்கலையாக உள்ளதை எண்ணிப்பார்த்தால் வியக்கத் தோன்றும். சினிமாவின் வளர்ச்சி மாறிக் கொண்டே வந்து நவீன கம்ப்யூட்டர் யுக்திகளையும் கொண்டு இப்போது சினிமாவில் செய்ய இயலாதது என்று எதுவும் கிடையாது என்பதை அழகாக சொல்லி சினிமா நம் அனைவருக்கும் கனவுலக சஞ்சாரம் செய்ய டிக்கெட் தருகிறது .

நம் மனதின் உணர்வுகளை நாம் செய்ய முடியாததை அல்லது நாம் செய்த ஒன்றை அல்லது கற்பனை பொழிவுகளை கதை வடிவில் நல்ல ரசனை உணர்வுடன் வெளிக் கொண்டு வருகையில் அந்த கற்பனை வடிவுடன் நல்ல தொழில் நுட்பம் சேர்ந்து சினிமா கலை வடிவங்களின் முடி சூடா மன்னன் போல் திகழ்கிறது.

சினிமா அதன் பின்னணியில் தன் உயிர் நாடியாய் சிந்தனாவாதிகளை கொண்டுள்ளது. தொழில் நுட்பத்தின் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு சினிமா என்றால் அது மிகையாகாது. மனிதனின் கற்பனாவளம் விஞ்ஞானத்தின் இச்சிறந்த கண்டுபிடிப்பில் கதைகளை கொண்டு சென்ற போது சினிமாவிற்கு கிடைத்த புதிய பரிணாமம் நாம் இன்று வரை அதை எங்கெல்லாமோ கொண்டு செல்ல வழி வகுத்தது.

சினிமாவிற்குள் ஓர் படைப்பாளியாய் வருவதற்கென்று எல்லாரும் வந்தாலும், பலரின் உந்துதல் சினிமாவை ஒரு பணம் பெருக்கும் வியாபாரக் கருவியை மட்டுமே இயக்குவதாய் உள்ளது. எப்படியாவது ஒரு கதையை சொல்ல வேண்டும். ரசிகர்கள் இததான் ரசிப்பார்கள் என்று அரை வேக்காட்டுத்தனத்துடன் ஏதாவது ஒரு கதையையும் கற்பனையையும் கொண்டு வரும் கதாசிரியர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பளர்களை சினிமாவும் சரி மக்களும் சரி புறக்கணித்து விடுவதை நாம் கண்கூடாக கண்டாலும் இன்னும் பலர் அந்த விக்கிரமாதித்த முயற்சியில் பலவந்தமாக இறங்கி தண்டனை அடைகிறார்கள்.

ஒரே கதை, இல்லை கொஞ்சம் மாற்றுவோம் அண்ணே... என்று பேருக்கு எதாவது மாற்றி வடைகறி போல் கதை செய்யும் கூட்டங்களை தமிழ் சினிமா விட்டால்தான் உலக அரங்கில் தமிழ் படங்களும் அதன் படைப்பாளிகளும் தவழ முடியும். தமிழன் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்று டாம்பீகமாய் பறை சாற்ற முடியும்.

மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அண்ணே என்று கதை சொல்ல கூடாது அண்ணே. ஜனரஞ்சக சினிமா எடுப்பதற்கு கொஞ்சம் புதிய கதைகளை கையாளுங்கள். புதிய ரசனைகளை உள்ளத்தை தொடும் வகையில் கதைகளாக்குங்கள். நாலு பாடல்கள், நாலு பைட், சும்மா அதிரும் அண்ணே என்று அல்வா கொடுத்தால் என்ன ஆகும்? போகப் போக ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளின் கதையாய் அழுகி அலுத்துத்தான் போகும்.

தமிழ் சினிமா மாற வேண்டும். தமிழ் மக்கள் இன்னும் விசில் அடித்துக் கொண்டு பூக்களையும் வண்ணக் காகிதங்களையும் எரிந்து அசுத்தப் படுத்தும் கூத்தை விட்டு விட்டு, வேறு வகையில் வரும் சினிமாக்களை ரசிக்க கற்றுக் கொள்ளவேண்டும். தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளையும் இயக்குனர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

தமிழின் தரம் உலகம் அறிய வேண்டும்...தமிழ் சினிமா இயக்குனர்கள் செய்யும் சிறு முயற்சிகளை இன்னும் பலப் படுத்த வேண்டும்.....

வாழ்க தமிழ்.... வாழ்க தரமான தமிழ் சினிமா!

முகில்

Monday, April 13, 2009

நான் கடவுள் பற்றிய கருத்துகள்


அன்பர்களே

நான் கடவுள் அப்படத்தை பார்த்தவர்கள் மனதை நெகிழச் செய்திருக்கிறது. சிலர் கூறிய கருத்துக்கள் இங்கு உள்ளன.

கிருஷ்ணா
இது என் சங்கப்பலகை
ராமசாமி நல்லமுத்துப்பிள்ளை
MK. Preetha
ஆகியோர் கருத்துக்கள் ....இதோ கீழ் இருக்கும் link-ல் !

https://www.blogger.com/comment.g?blogID=6795831769841907029&postID=866320196563258383&isPopup=true

உங்களின் கருத்துக்களை வெளியிட follow என்றிருக்கும் தொடர்பை கிளிக் செய்யவும். gmail அல்லது yahoo மூலமாக sign-in செய்து உங்கள் கருத்துக்களை வெளியிடலாம்

நன்றியுடன்
முகில்

Sunday, April 5, 2009

2000 ரூபாய் முதல் பரிசு


நீங்கள் சிறந்த திரைப்பட ரசிகரா?
நீங்கள் நன்றாக சிந்தனை செய்பவரா?
நீங்கள் திரைப்படங்கள் மீதான உங்கள் சிந்தனையை நன்றாக எழுதக் கூடியவரா?
கீழ் கண்ட இணைய தளத்தில் சேர்ந்து உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துக.

உங்களில் சிறந்த சிந்தனையாளருக்கு, சிறந்த எழுத்தாளருக்கு ரூபாய் இரண்டாயிரம் பரிசு காத்திருக்கிறது.

போன வருடத்தில் வந்த சிறந்த படங்களில் ஐந்தை தேர்ந்தெடுத்து அவை சிறப்பான படங்கள் என்பதற்கான உங்கள் கண்ணோட்டத்தை எட்டு வாக்கியங்களுக்குள் எழுதி படங்களை டாப் five ஆக வரிசை படுத்த வேண்டும்.

தமிழ் படங்கள் உலக ரீதியாக சிறப்பு பெற மேலும் என்ன வகையில் வாய்ப்புகள் உண்டு? யாரிடம் அந்த பொறுப்பு உள்ளது என்றும் ஒரு சிறு கட்டுரை எழுத வேண்டும். ௨000 வார்த்தைகள் வரை அமையலாம்.

உங்களில் சிறந்த எழுத்தாளர் 2000 ரூபாய் பரிசாக பெறுவார். நீங்கள் http://www.tamilfilmcritic.blogspot.com/ -ல் உறுப்பினராக சேர்ந்து கருத்துக்களை வெளியிட வேண்டும்.

Join www.tamilfilmcritic.blogspot.com and start writing. Express your talents today!

நீங்கள் எழுதிய பின் ஒரு email அனுப்பவும்: tamilfilmcritic@gmail.com என்ற முகவரிக்கு. உங்கள் முழு பெயர் மற்றும் முகவரி, தொலைபேசி எண் போன்ற விபரங்கள் எங்களுக்கு வந்தால்தான் முதற் பரிசை உங்கள் இல்லத்திற்கு அனுப்பலாம்.

நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

முகில்

Saturday, April 4, 2009

"தீ" எரிவது போல் தெரியவில்லை...
நிர்வாணமாய் சுந்தர். சி ஆண்டி கோலத்தில் வருவதை எப்படி நியாயப் படுத்தலாம் என்று இயக்குனர் செய்த முயற்சி, அரசியல்வாதியாய் மாற சுந்தர். சி செய்யும் வழக்கமான திடுக் திருப்பம் என்று ஓர் வழக்கமான தமிழ் படம்.

போலீஸ் நாட்டிற்க்கும் மக்களுக்கும் எவ்வளவு தேவை என்பதை சொல்லும் படங்களில் இதுவும் ஒன்று. அரசியல்வாதிகளின் அடாவடித் தனத்தை ஒரு இன்ஸ்பெக்டர் ஆக கதாநாயகன் சுந்தர் சி எப்படி ஒடுக்குகிறார் என்று காட்டும் மசாலாத் தீ அவ்வளவு இதமாக இல்லை.

ஆரம்பத்தில் இருந்தே ஒரு பிடிப்பில்லாமல் போகிறது. திரும்ப திரும்ப வந்த கதை போல் இருப்பதால் இதுதான் நடக்க போகிறது என்று ஓரளவு செய்யும் நம் ஊகம் சரியாக செல்கிறது.

இன்ஸ்பெக்டர் ஆக இருந்தவர் ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகளால் தாக்கப் பட்ட பின் குடும்பத்தையும் இழக்கிறார். மறுபடி அரசியல் வாதியாய் மாறி பழி வாங்க வரும் சுந்தர் சி சந்தனம் குங்குமம் பூசி கொண்டு அதே முகம் மேக் அப்புடன் வருவது அப்பட்டமான தவறு. அவரை பார்த்தால் அப்படியே தெரிகிறது பழைய இன்ஸ்பெக்டர் என்று. அவரது எதிரிகளுக்கு எப்படி தெரியவில்லை என்று எனக்கு புரிய வில்லை.

மறுபடி மறுபடி கதையை கொண்டு செல்ல இயக்குனர், முயற்சி செய்திருக்கிறார். படம் எடுப்பதற்கு கதை ஒன்று வேண்டும், எந்தக் கதையை சொல்லி எந்த தயாரிப்பாளரை பிடிப்பது என்பதற்கு ஒரு திறமை இருந்தால் போதும் என்ற முறையில் இந்த படம் நாம் ஏற்கனவே பார்த்த இட்லி சாம்பார்.

ஸ்ரீகாந்த் தேவா இசை ரசிக்கும் படி இருந்தது. நடிப்பிற்கு ஒன்றும் பெரிய வாய்ப்புகள் இல்லை. அரசியல் வாதி ராம பாண்டியன் நல்ல முறையில் நடித்திருக்கிறார்.

சுந்தர் சி இன்னும் நடனப் பயிற்சி எடுத்தால் நல்லது. இடுப்பு கொஞ்சம் வளைந்து பாவங்களை கூட்டலாம். புது கதாநாயகி மலேசியா ரம்யா-விருக்கு நல்ல எதிர்காலம் இருக்கலாம், நடிப்பில் இன்னும் கொஞ்சம் ஈடு பாடு இருந்தால்!

வேறு ஒன்றும் பெரிதாக சொல்வதற்க்கில்லை. தீயின் சூடு அவ்வளவாகத் தெரியவில்லை.

Thursday, April 2, 2009

திரைப்படத்தின் போக்கு...

மனிதர்கள் மாறுகிறார்கள். அதே போல் மனிதனிடம் உருவாகும் ரசனையும் மாறுகிறது. திரைப்படத்தின் வரலாறு அதில் இருந்து விதி விலக்கல்ல. படம் முழுதும் பாடல்கள், மெல்ல ஆறுதலாகப் பேசி கவலையை போக்க நையாண்டி, கதை அம்சம் என்று தொடங்கிய தமிழ் படங்கள் மக்கள் ரசிக்கத்தக்க வகையில் காட்சிகளுடன் சமூக நன்மையையும் மனதில் கொண்டு கதை காட்சிகளை கொண்டிருந்தன. படங்கள் நாளாவட்டத்தில் மாறி தற்போது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் காட்டலாம் என்று வந்து விட்டன. மனிதன் மாறி உள்ளான். திரைப்படங்களும் மாறி உள்ளன என்று நாம் அப்படியே போனாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு நம்மை கேட்க்கும். நமது கலாச்சாரம் எங்கு போனது என்பதுதான் அது. ஆனால் கலாச்சாரத்தை பற்றி யார் கவலைப்பட? மனிதன் மாறி விட்டான். கலாச்சாரம் மாறத்தானே செய்யும். நமது கால கட்டத்தில் உள்ள பெரியவர்களுக்கு நாம் செய்வது சரியல்ல என்று தோன்றும். நமது சந்ததி செய்வது நமக்கு கசக்கும். இதற்க்கு முடிவுண்டா? நமது கலா ரசனையும் வெளிப்பாடும் நாளைய சமுதாயத்தில் நல்லவை நடக்க வழி கோலுமேயயாயின் அதுவே சிறந்த வெளிப்பாடு. உணர்வு. ஆனால் இன்றைய சமுதாயம் வியாபார எண்ணத்தில் மக்கள் உணர்வுகளின் ஸ்திரம் இல்லா தன்மையை சாதகமாக்கி கலை என்ற பெயரில் திரைப்படங்களில் புகுத்துவது சரியா என்று தோன்றவில்லை. எது கலை? எது நமக்கு தேவை? சராசரி மனிதனால் இதற்க்கு பதில் சொல்ல தெரியாது. அதில் அவனுக்கு ஆர்வமும் கிடையாது. கலைஞர்கள் அல்லது சிந்தனைவாதிகள் சொல்வார்களா?

முகில்

Wednesday, April 1, 2009

நான் கடவுள்

அண்மையில் நான் கடவுள் படம் பார்த்தேன். இயக்குனர் பாலா தன் சமூக உணர்வை, ஈடுபாட்டை ஒரு மனிதனாய் மிக நல்ல முறையில் இப்படத்தின் மூலமாக தந்துள்ளார்.

அப்பாவி மக்கள் சுயநலத்துக்காக எப்படி சமூகக் கழுகுகளால் புண் படுத்த படுகிறார்கள் என்பது படத்தின் மூலாதாரம். எங்கோ காசியில் வாழும் அஹோரி கதாநாயகன் ஆர்யா கதையின் பின்னலால் தன் ஊருக்கு வந்தாலும் படம் பார்க்கும் வரை படத்தில் ஈர்ப்பு நன்றாக உள்ளது. விருப்பு வெறுப்புகளை அகற்றி வாழும் ஆர்யா கடவுளாகவே கருதப்படுகிறார்.

உள்ளில் இருப்பது உண்மை என்று உறவுகள் என்ற சொல்லுக்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டு ஒரு மேம்பட்ட நிலையில் கடவுளாய், மனிதனாய் வருகிறார். துஷ்டர்களை துவம்சம் செய்கிறார்.

ஒரு சிறு கிராமத்தில் நடக்கும் அக்கிரமங்களை தட்டி கேட்காத வினோதமான ஊராய் வேறு எந்த பெரிய மனிதர்களும் இல்லாத கிராமமாய் மலைக்கோவில் வந்தாலும் கதை சில நாட்களே நடக்கிறது என்ற பட்சத்தில் நாம் அதை கேட்க வேண்டாம்.

சிவபெருமான் போல சாம்பலை அள்ளி உடம்பில் பூசி அகம் புறம் கிடையான் என்று ஓர் வாழ்க்கை வாழும் அஹோரியாய் ஆர்யா நடிப்பில் மின்னுகிறார்.

பூஜா ஒரு குருடியாய் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். கதா பாத்திரங்களுக்கு ஏற்ப பொருத்தமான மேக்கப். நல்ல பாத்திரங்களுடன் கதையும் மிக நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.

அங்க ஹீனங்களுடன் உள்ள எத்தனையோ உயிர்களின் அவலங்களை காணும் போது மனம் கவலை படுகிறது. ஆனால் அவர்களின் உலகிலும் கேலியும் கூத்துமாய் ஓர் மகிழ்வு இருக்கிறது என்று இயக்குனர் ஒரேயடியாய் கவலையில் மூழ்காமல் சந்தோசத்தை கலந்து தந்தது நல்ல பாங்கு.

படப்பிடிப்பில் ஆர்தர் வில்சன், படத்தின் கலை அமைப்பு, மிக மிக முக்கியமாய் இசை ஞானி இளையராஜா இசை இந்த படத்தின் சக்தியை கூட்டுகிறது .

நான் கடவுள் அப்படியே இந்தியா முழுதும் செல்ல மாட்டாரா என்ற உணர்வு ஏற்படுகிறது.

முகில்