Friday, June 25, 2010

ராவணன்! மணிரத்னத்தின் வன வாசம்!













பல வருடங்களுக்கு பின் மணிரத்னம் வருகிறார் என்ற எதிர்பார்ப்புடன்      இந்தப் படத்தைப் பார்க்கப் போனேன். வனத்திற்குள் வாசம் செய்து படம் முழுக்க முடித்து விடுகிறார். திரைப்படக் கலையின் தொழில் சிறப்பை ஆயுதமாக வைத்து தன் படைப்பின் ப்ரமிப்பை ரசிகர்களுக்குக் கொடுத்தாலும் கதைக்களம் சாதாரணமான ஒன்று என்ற வகையில்  இம்முயற்சியின் பரிமளிப்பு கொஞ்சம் சோடை போவது போல் ஒரு உணர்வு.

 ஒரு பார்வையாளனாக படத்தின் ஆரம்பத்தில் காட்சி கோர்ப்புகளை உள்வாங்கி ஒருங்கிணைக்க சற்று சிரமமாக இருந்தது.

காட்சிகள், காட்சியமைப்பின் கடின உழைப்பு, படப்பிடிப்பு நடத்திய இடங்கள், நேரம், ஒளி ஓவியர்களின் திறம், மற்ற கலைஞர்களின் ஒத்துழைப்பு என்று, ராவணன் ஒரு தரமான முயற்சியைத் தருவதை நான் உணர்ந்தாலும்,  ஒரு இயக்குனர் என்ற முறையில் மணி அவர்கள் ஏன் இந்தக் கதையில் நாட்டம் கொண்டார் என்று அலச முயன்ற போது, ஒரு ஏமாற்றம் ஏற்பட்டது.

திரையுலகில் இயக்குனர்களாய் பவணி வந்து கொண்டு இருக்கும் பலரின் மனதிலும் ஏற்படக்கூடிய போலிஸ் அராஜகம் என்ற சிந்தனைதான் ராவணனின் மூலக்கரு. வியாபார அடிப்படையில் மணிரத்னத்தின் முந்தைய படங்கள் ஏமாற்றம் அளித்த்து என்ற பின்ணணியில் ராவணனின் வெற்றிக்கு ஏற்படுத்தப்பட்ட யுக்தியாய் கதையின் பாங்கு தோன்றியது.

வீராவாக வரும் விக்ரம் எப்படி ராவணனாக இயக்குனரின் பார்வையில் வருகிறார் என்று எண்ணினால் எஸ்.பி யாக வரும் ப்ருத்வி ராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயைக் கடத்தி அவரின் அழகில் மயங்கும் ஒரு பாத்திரமாக விக்ரம் புணைக்கப்பட்ட விதம் என்ற அடிப்படைதான்.

14 வருட வனவாசம் என்ற ராமாயணம். 14 நாட்கள் (Miniature Version) சிறை பட்டிருந்த நமது சீதாவாக ஐஸ்வர்யா. ப்ருத்விராஜ் ராமன் வேஷத்திற்கு பொருத்தமானவர் ஆனால் ஒரு போலிஸ் அதிகாரியாக ராமனின் குணநலம் மற்றும் மணுதர்மம் இல்லாதவராய் இருந்தார். மணி ரத்ணம் அந்த சில நல்ல குணங்களில் சிறிதை ராவணனாய் வரும் விக்ரமிற்கு கொடுத்து விட்டார்.

அழகின் சபலம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற ஒரு கண்ணோட்டத்தை,  பலதரப்பட்ட சொல், செயல் தர்மங்களை காக்கும் கதா நாயகனான விக்ரமிற்கு, ஒரு மணமான பெண்ணிடம் வருவது 21 ஆம் நூற்றாண்டின் விதி விலக்கா என்று கேட்கத் தோன்றுகிறது.  விக்ரமிற்கு வரும் அந்தக் காதலை மிகவும் அதிகம் காட்டி மக்களிடமோ, குறிப்பாக பெண்களிடமோ வம்பை விலைக்கு வாங்கி அதில் ஏதேனும் தடங்கல் செய்யவே சில கூட்டம் அலையும் என்ற ஐயம் மணி அவர்களைக் கொஞ்சம் ஜஹா வாங்க வைத்தது போலவும் அவர் மந்திரி சபையின்  வியாபார நோக்குமாகவும் வியூகமாகவும் தெரிகிறது.


 சில நாட்களே நடக்கும் இந்த கதைக்களத்தில் சில இடங்களில் ஓட்டைகள் இல்லாமல் இல்லை. இயல்பு மீறிய நடப்புகளை தம் வசதிக்காக (மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று) லாவகமாக இணைத்து முயற்சி செய்தாலும் கதையுடன் அந்நிகழ்வுகள் ஒட்டாமல் பிரிவது ஒரு சிறு தொய்வையும் ஏற்படுத்துகிறது.  பக்பக்கென்று மன நோயாளி போல் பேசும் விக்ரம், சாகும் தருவாயில் பயம் போக்கப் பாடும் ஐஸ்வர்யா என்ற சினிமா பூச்சுக்கள் சுதந்திரப் போராட்டகால சினிமாவை நினைவுறுத்துகிறது.

பாத்திரப் படைப்பில் இன்னும் கொஞ்சம் மாற்றங்கள் செய்திருக்கலாம் என்று நான் எண்ணினேன். விக்ரம் பாத்திரப் படைப்பு மனதில் ஒட்டாமலேயே இருந்தது. ப்ருத்வி ராஜ் தோற்றம் ஒரு பெண்மைத் தனத்தைக் காட்டியது. ஐஸ்வர்யா ராய் நன்றாக நடித்திருக்கிறார் ஆனால் ஏன் நடிக்கிறோம் என்று அவருக்கே தெரியாத மாதிரி சில நேரங்களில் தெரிகிறார்.

பிரமிப்பு என்ற ஒரு யுக்தியின் மூலம், காட்சிப் ப்ரயோகம் செய்வது பார்வையாளர்களை கொஞ்சம் திகைப்பில் ஆழ்த்தினாலும், கதையின் பாங்கு கொஞ்சம் வெற்றிடத்தையும் தொய்வையும் காட்டுகிறது.

ரஹ்மானின் இசை நன்றாகவே இருந்தது. கள்வரே பாடல் அருமை. படமாக்கிய விதம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.

ராவணன், ஏன் அப்படி வாழ்ந்தான் என்று தெரிந்து கொள்ளும் நியாயத்தை தெரிந்து கொள்ளாத போலிஸின் வெறி.  ஒரு அதிகாரியின் மனைவியை கடத்தி வந்தமைக்காக கடைசியில் ராவணன் தன்னைக் காப்பாற்றியவன் என்று தெரிந்த பின்னும், கொல்லப்படும் போது குறி பார்த்து சுடும் ஒரு குண்டு இதயத்தில் பாய்ந்தால் போதாதா?  நம்ம சினிமாக்காரர்களுக்கு அப்போது தெறிக்கும் ரத்தத்தை ஐஸ்வர்யா முகத்தில் பட வைக்கத் தெரியாதா?
ராவணனை சிறு பிள்ளைகள் பொட்டு வெடி துப்பாக்கி வைத்து தீபாவளி அன்று சுடுவது போல் ஏன் மணி ரத்னம் சுட வைத்தார் என்று தெரியவில்லை. அப்பட்டமான சினிமாத்தனமாய் சிறுபிள்ளைத்தனமாய் இருந்தது.

அதீத மெல்லசைவான (HIGH RATE SLOW MOTION) யுக்தியில்  திரைச்சுருளை ஓட்டி, நடிகர்களின் நடிப்பாலும், தன் காட்சி கோர்ப்பாலும் (MONTAGE) கடைசியில் உணர்வுகளை பரிமாறும் இடம் மனதில் தாக்கம் ஏற்படுத்தியது.

கையால் தொடாமல் ரத்தத்தின் மூலம் தன் காதலியைத் தொட்டுவிட்டு, கைகளை விரித்து தொட முயன்றவாறே, ஒரு பெரும் பள்ளத்தாக்கில் விழும் ராவணன்....

இன்னொருவன் மனைவியின் மீது வரும் அந்தக் காதல் கொச்சைப்படுத்தப் படாமல் அப்படியே போய் விட்டால் நல்லது என்று ராவணனை மட்டும் பள்ளத்தில் தள்ளிவிட்டு அப்படியே ப்ரமிப்புடன் திரையை இருட்டாக்கி மக்களை வெளியே அனுப்பிவிட்டார் மணிரத்னம்.

வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்று முயலும் ரகத்தில் மணிரத்னம்
குழுவினர்  எப்போதும் போல முயன்றதும் திரைப்படக் கலையின் மெருகுகளை கவனத்துடன் தர
முயன்று  வெற்றியும் பெற்றதற்கு பாராட்டினாலும், வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட படம் என்ற அடிப்படையில், சில உள்ளங்களின் நல்ல ரசனையின் உதவியில், படைப்பாற்றலின் பக்க பலத்தில் தமிழ் திரையில் ஒரு வண்ணம் கூடப் பூசிய மசாலாவாகத்தான் ராவணன் தெரிகின்றான்.