Saturday, October 31, 2009

தமிழ் படங்களின் பாதை...

நீண்ட நாட்களாய் எண்ணி பார்த்திருக்கிறேன். இன்றுதான் எழுத வேண்டும் என்று தோன்றியது. தமிழ் படங்கள் என்பது அன்று முதல் இன்று வரை வியாபார ரீதியில் மட்டுமே தம் பயணப் பாதையையும் தளத்தையும் அமைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அறிவியலின் பரிசாக அளிக்கப்பட்ட திரைப்பட நுண்மைகள் முதலில் கலையின் வெளிப்பாட்டாக நினைவுகளை கொண்டு வர முயன்றது ஒரு கட்டாயப் பண்பு என்ற உண்மை பின் மக்களை வசிகரப் படுத்திய தன்மை எல்லாம் கலையின் வடிவுடன் வியாபார சந்தையாகவும் மாறிவிட்டது என்பதை சற்று அமைதியாக பின்னோக்கினால் விளங்கும்.

உலகப் படங்கள் என்ற விஸ்தாரத்தில் சமூக அக்கறையுடன் எடுக்கப்படும் படங்களுக்கென்று மிகச் சிறிய அளவே இடம் உள்ளது என்பது அப்பட்டமான உண்மை. திரைப்படக் கலையை அடிப்படையாக வைத்து எதை சொல்ல விரும்புகிறோம் என்று கேள்விகள் கேட்டு இயங்கும் பல கலார்விகளில் 90% ஒரு வியாபார அளவிலான கதைகளை மையமாக வைத்தே தம் முயற்சிகளை செய்கிறார்கள். அவர்களின் திறமைகளை பற்றியோ, அவர்களின் கலை வெளிப்பாட்டு உணர்வை பற்றியோ நாம் சிந்திக்க வில்லை. தமிழ் படங்களில் வித்தியாசமான முறையில் தம் கலை உணர்வுகளை சொல்லக் கூடிய இயக்குனர்கள் என்றும், வித்தியாசமான அணுகுமுறை என்றும் உலகளாவில் பேசப்படும் அளவில் படங்கள் எடுக்கப் படவில்லை என்பதே என் சிந்தனை...

சிற்சில முயற்சிகளை எடுத்து தம் வியாபார நோக்கில் தயாரித்த படங்களில் சில வித்தியாசங்களை, பாலச்சந்தர், பாரதி ராஜா, மகேந்திரன், ஞான சேகரன், கே.ஷங்கர், மணி ரத்னம், வசந்த், தங்கர் பச்சான் போன்றவர்கள் அளித்திருந்தாலும், மாறுபட்ட முயற்சிகளுக்கென்று பிரத்யேகமாய் எந்த ஒரு இயக்குனரும் வரவில்லை. தனித்துவம் என்ற அடிப்படையில் சினிமாவை ஒரு கலை வெளிப்பாட்டு ஊடகமாய் வித்தியாசமான முயற்சிகளை செய்ய சத்யஜித் ரே, மிர்னாள் சென், அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன் போன்ற இயக்குனர்கள் தமிழில் இல்லை என்று சொல்ல விழைகிறேன்.

கோடார்ட் போன்ற தீவிர முயற்சிகளில் நம் பாங்கு வெளிப்படுமா என்று தெரியவில்லை ஆனால் சினிமாவை ஓர் சோதனைச் சாலையாய் மாற்றி, நிதர்சனத்துடன் தம் கற்பனை கலந்து தர பெருமளவில் தேவைப்படும் தைரியம் இயக்குனர்களுக்கோ, தயாரிப்பாளர்களுக்கோ இதுவரை இல்லை என்ற உண்மையையும் நாம் நோக்க வேண்டும்.


சாத்தியம் இல்லை என்று பாழுனர்வுடன் நான் எதிர்மறையாய் பேசவில்லை. என்று வரும், யார் செய்வார் என்ற எண்ணங்களை சற்றே மனதில் கொண்டு புதுமை உணர்வுகளுடன் தமிழ் திரைப்படம் செல்ல வேண்டிய ஒரு பாதை வேண்டும் என்ற நோக்கத்தை சொல்ல விழைகிறேன்...


உலக அரங்கில் தன்த்துவம் வாய்ந்த படைப்புகளுக்கான அரங்கத்தில் நமது தமிழ் படமும் வெளிவரும் நாளை எதிர்பார்த்து ஏங்கும் உள்ளங்களில் நானும் ஒருவனாய் உள்ளேன் என்றே கூறிக்கொள்கிறேன்!


வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் இயக்குனர்கள்! வருக தமிழ் தனித்துவப் படங்கள்!
:-) முகில்.

Sunday, October 4, 2009

கந்தசாமி அப்பட்டமான அந்நியத்தனம்!

விக்ரம் பல நாட்க்களுக்குப் பின் அவர் பாணியில் வந்துள்ளார் என்பது ஓகே. ஆனால் விக்ரமுடைய சுய விலாசங்களில் இருந்து மீண்டு ஒரு படி மேலே சென்று ஒரு பண்பட்ட நடிகனாய் அவரைக் காண முடியவில்லை. அது கதையும் இயக்குனரும், தான் மறுபடியும் ஒரு தோல்வியை தழுவத் தயாராக இல்லை என்று அச்சம் கொண்ட விக்ரமுமாக முக்கோணக் கிரியையாய் கந்தசாமி உருவெடுக்க காரணம் என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். விக்ரம் தன் நடிப்பில் கூட அப்படியே அந்நியத்தனத்தை காட்டியிருக்கிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விக்ரமின் நடிப்பாற்றல் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது இங்கு எதிர்பார்த்த சூட்டைத் தரவில்லை.

சுசி கணேசன் அவர்கள் என்ன வித்தியாசமாக செய்திருக்கிறார் என்றால் எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் சமீப காலங்களில் விக்ரம் படங்கள் தழுவிய தோல்வியில் இருந்து அவரைக் காப்பாற்றி கொண்டுவந்து ஒரு வெற்றிப் படத்தை கொடுத்த ஒரு பெரும் வித்தியாசத்தை செய்துள்ளது ஒரு திறமைதான். மெகா பட்ஜெட் படத்தினை வியாபார அளவில் வெற்றி பெறவைத்ததை தவிர படத்தில் வித்தியாசங்கள் ஏதும் இல்லை.


கம்ப்யூட்டர் மூலமாக புகார் சேகரித்த கதா நாயகன் மரத்தில் கோர்த்த மக்கள் புகார் சீட்டுகளின் வலியைத்த் தீர்க்க முயல்கிறார் கந்த சாமியாக...


சண்டை காட்சிகளின் இயக்கம் நன்றாக உள்ளது. கிராபிக்ஸ் மற்றும் சண்டைக் கோர்ப்பு பார்க்கும் விதத்தில் இருந்தது.


நல்ல மசாலா அரைத்து தந்த ஒரு சமையல் கூடத்தை பார்க்க முடிகிறது! மசாலாவின் மனம் பரவாயில்லை என்றே கூற முடியும்!


கந்தசாமி கொக்கரித்த சத்தம் நம்மை எழுப்ப வில்லை என்றாலும் சேவல் கூவி விட்டது என்று அறிந்து கொள்ள முடிகிறது!


முகில்