Saturday, October 31, 2009

தமிழ் படங்களின் பாதை...

நீண்ட நாட்களாய் எண்ணி பார்த்திருக்கிறேன். இன்றுதான் எழுத வேண்டும் என்று தோன்றியது. தமிழ் படங்கள் என்பது அன்று முதல் இன்று வரை வியாபார ரீதியில் மட்டுமே தம் பயணப் பாதையையும் தளத்தையும் அமைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அறிவியலின் பரிசாக அளிக்கப்பட்ட திரைப்பட நுண்மைகள் முதலில் கலையின் வெளிப்பாட்டாக நினைவுகளை கொண்டு வர முயன்றது ஒரு கட்டாயப் பண்பு என்ற உண்மை பின் மக்களை வசிகரப் படுத்திய தன்மை எல்லாம் கலையின் வடிவுடன் வியாபார சந்தையாகவும் மாறிவிட்டது என்பதை சற்று அமைதியாக பின்னோக்கினால் விளங்கும்.

உலகப் படங்கள் என்ற விஸ்தாரத்தில் சமூக அக்கறையுடன் எடுக்கப்படும் படங்களுக்கென்று மிகச் சிறிய அளவே இடம் உள்ளது என்பது அப்பட்டமான உண்மை. திரைப்படக் கலையை அடிப்படையாக வைத்து எதை சொல்ல விரும்புகிறோம் என்று கேள்விகள் கேட்டு இயங்கும் பல கலார்விகளில் 90% ஒரு வியாபார அளவிலான கதைகளை மையமாக வைத்தே தம் முயற்சிகளை செய்கிறார்கள். அவர்களின் திறமைகளை பற்றியோ, அவர்களின் கலை வெளிப்பாட்டு உணர்வை பற்றியோ நாம் சிந்திக்க வில்லை. தமிழ் படங்களில் வித்தியாசமான முறையில் தம் கலை உணர்வுகளை சொல்லக் கூடிய இயக்குனர்கள் என்றும், வித்தியாசமான அணுகுமுறை என்றும் உலகளாவில் பேசப்படும் அளவில் படங்கள் எடுக்கப் படவில்லை என்பதே என் சிந்தனை...

சிற்சில முயற்சிகளை எடுத்து தம் வியாபார நோக்கில் தயாரித்த படங்களில் சில வித்தியாசங்களை, பாலச்சந்தர், பாரதி ராஜா, மகேந்திரன், ஞான சேகரன், கே.ஷங்கர், மணி ரத்னம், வசந்த், தங்கர் பச்சான் போன்றவர்கள் அளித்திருந்தாலும், மாறுபட்ட முயற்சிகளுக்கென்று பிரத்யேகமாய் எந்த ஒரு இயக்குனரும் வரவில்லை. தனித்துவம் என்ற அடிப்படையில் சினிமாவை ஒரு கலை வெளிப்பாட்டு ஊடகமாய் வித்தியாசமான முயற்சிகளை செய்ய சத்யஜித் ரே, மிர்னாள் சென், அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன் போன்ற இயக்குனர்கள் தமிழில் இல்லை என்று சொல்ல விழைகிறேன்.

கோடார்ட் போன்ற தீவிர முயற்சிகளில் நம் பாங்கு வெளிப்படுமா என்று தெரியவில்லை ஆனால் சினிமாவை ஓர் சோதனைச் சாலையாய் மாற்றி, நிதர்சனத்துடன் தம் கற்பனை கலந்து தர பெருமளவில் தேவைப்படும் தைரியம் இயக்குனர்களுக்கோ, தயாரிப்பாளர்களுக்கோ இதுவரை இல்லை என்ற உண்மையையும் நாம் நோக்க வேண்டும்.


சாத்தியம் இல்லை என்று பாழுனர்வுடன் நான் எதிர்மறையாய் பேசவில்லை. என்று வரும், யார் செய்வார் என்ற எண்ணங்களை சற்றே மனதில் கொண்டு புதுமை உணர்வுகளுடன் தமிழ் திரைப்படம் செல்ல வேண்டிய ஒரு பாதை வேண்டும் என்ற நோக்கத்தை சொல்ல விழைகிறேன்...


உலக அரங்கில் தன்த்துவம் வாய்ந்த படைப்புகளுக்கான அரங்கத்தில் நமது தமிழ் படமும் வெளிவரும் நாளை எதிர்பார்த்து ஏங்கும் உள்ளங்களில் நானும் ஒருவனாய் உள்ளேன் என்றே கூறிக்கொள்கிறேன்!


வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் இயக்குனர்கள்! வருக தமிழ் தனித்துவப் படங்கள்!
:-) முகில்.

No comments:

Post a Comment

Thank you for expressing your great thoughts!