Monday, January 11, 2010

ஈரம்


ஈரம் ஒரு வீரமான முயற்சி. புதுமுகங்கள், பழைய கதைக்களம், நவீனம், நல்ல பார்வை இம்முயற்சியை திருவிணையாக்கி உள்ளது. திரைப்படத்தின் ஆணிவேர் நல்ல திரைக்கதை. அதை இதில் ஓரளவு புரிந்து செயல் படுத்திய விதம் விவேகம்!

ஆவிகள் உள்ளது என்பது காலா காலமாய் நாம் கேட்டு பயப்பட்ட விஷயம். ஈரத்தில் உள்ள ஈர்ப்பு ஆவியே! ஷங்கர் தயாரிப்பாளராய் பணம் போடுகிறார் என்றல் சும்மா இல்லியே! ஆவி பணத்தை தரும் என்ற நம்பிக்கைதான்! அறிவழகனின் அறிவழகில் உள்ள ஈரம் பதமாக ஒரு படமாக வந்து பலரையும் பேசவைத்துள்ளது! வாழ்த்துக்கள் டீம்!

கல்லூரிக்காலம், காதல் ஈர்ப்பு, வாழ்க்கை முறை, பண்பாடு, எண்ண முரண்பாடு என்று வாசு-ரம்யா காதல் பிரிய, வாழ்க்கை பாலகிருஷ்ணன் என்ற ஒரு வரனை அறிமுகப்படுத்துகிறது ரம்யாவின் வாழ்வில்! மனரீதியாய் பாலா ஒரு தர நிர்ணய வரைமுறை உள்ளவன் ! அவன் வகுத்த தரம் மாறிவிட்டால் ஏற்றுக்கொள்ள இயலாதவன். எதிலும் களங்கம் இல்லா புதுத்தனம் நாடும் பாலாவிற்கு ரம்யா ஏற்கனவே இன்னொருவனால் காதலிக்கப்பட்டவள் என்ற உண்மை தெரியவர உள்ளூர வெறுப்படைகிறான். ரம்யாவின் மீது வெறுப்படையும் சில காலனிக்காரர்கள் பரப்பிய வதந்தி, ரம்யாவை கொலை செய்ய வைக்கிறது. பாலா கொலை செய்துவிட்டு அதை தற்கொலை என்று உலகை நம்ப வைத்துவிட்டு தான் சாதாரண வாழ்க்கையை அமைத்து கொள்ளும் போது ரம்யாவின் பழைய காதலன் வாசு ஓர் போலீஸ் அதிகாரியாய் வந்து உண்மையை விசாரித்து நடந்தது கொலை என்று நிரூபிக்கிறார்.

அபாண்டமாய் கள்ளக்காதல் பழி சுமத்திக் தன்னைக் கொலை செய்த கணவனையும், அதற்க்கு காரணமான சிலரையும் ரம்யாவின் ஆவி பழி வாங்குகிறது.

திரைக்கதை தண்ணீர் போல் விசையுடன் ஓட நமக்கு அது அழகாக தெரிகின்றது. அறிவழகனின் படகை ஓட்டிச்செல்லும் ஒளி ஓவியர் மனோஜ், கலையாளர், மற்றும் இசை ஓவியர் தமன் தகுந்த பலம் கொடுத்துள்ளது அழகு! நடிப்பில் ஆதி, நந்தா மற்றும் சிந்து மேனன் நல்ல முயற்சி செய்துள்ளனர்! பாத்திரப்படைப்பு என்பது ஒரு எழுத்தாளனின் பார்வை. அவன் ரசித்த சில பாத்திரங்கள் இப்படத்தில் உயிர் பெற்றுள்ளது ரசிக்கும் வகையில்.
நமது வாழ்வில் நாம் நமக்கு வைத்துக்கொள்ளும் வரைமுறைகளை எல்லையாக்கி மற்றோரை அப்படியே எதிர்பார்ப்பது தவறு என்ற ஓர் கருத்தை இப்பாத்திரங்கள் கூறுவதும், நம் வாழ்க்கையில் உள்ள குறைகளை மறைக்கப் பழி போடுவதால் ஏற்படும் துயரத்தையும் இந்தக் கதையின் ஒரு வேர் தாங்குகிறதைப் பார்த்தேன்.

தரமான படைப்பை தர வேண்டும் என்ற உந்துதல் தெரிகிறது. அதை பாராட்ட வேண்டும். சமூகத்தில் நடக்கும் சில விடயங்கள் அப்படியே படமாவதன் மூலம் ஒரு மட்டத்தில் இருந்து பார்க்கும் ஒரு தலைமுறைக்கும் மறு மட்டத்தில் உதிக்கும் இன்னொரு தலைமுறைக்கும் உள்ள இடைவெளி அங்கலாய்ப்பை அளிக்கவும் செய்கிறது. சில காட்சிகள் இளம் வயதினரின் உள்ளங்களை பாதிக்கலாம்.


நிறைவேறாத காதலின் வலியை ஈரம் மென்மையான உணர்வாய், காதலுக்கு இருக்கும் ஒரு மதிப்பாய் வாசுவின் மூலம் கொண்டு வந்து தன் காதலி களங்கமற்றவள் என்று வாசுவை உணர வைத்ததை அவன் வாயால் மதிப்புடன் சொல்லி இருக்கலாம். ஈரம் இல்லாத காதலன் போல் வாசு ரம்யாவின் காதலை தூக்கி எறிந்ததும், அவள் இறந்த பின்னும் பத்திரிக்கை செய்தியை காண்பித்து ரம்யாவின் ஆவியிடம் 'இப்ப என்ன பெயர் கிடைச்சிருக்கு தெரியுமா என்று கேட்டு "கள்ளக்காதல்" என்று போலீஸ் தனமாக கேட்பதும் வாசுவின் பாத்திரப்படைப்பில் ஒரு பலஹீனம் போல் தெரிந்தது. வாசு சில நல்ல வார்த்தைகளை கூறி தனியே நடந்து போவது போல் படத்தின் கடைசி காட்சி அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாசு அப்படி போக, மறு புறம் சிகப்பு குடை, கசியும் பெட்ரோல்... என்று தொடரும் குரோதம்...

சினிமாத் தனம் என்று சொல்லக்கூடிய விஷயங்களாய் சில வசனங்கள், காட்சிகள் என்று ஆங்காங்கே தெரிந்தாலும் கதையின் மூலம் சொல்ல விரும்பிய உணர்வு, நல்ல முயற்சியுடன் வெளிவந்துள்ளது. அது எதிர்பார்க்கப்பட்ட விடையை அளிக்கிறது. பார்ப்பது சினிமா என்ற உணர்வின் மேல் நம்மை உட்கார வைத்து கூட்டி சென்று இப்பயணம் ஒரு பயம் தரும் பாத்திரங்கள் அடங்கியது என்று சொல்லும் இந்த குழுவின் முயற்சி நன்று!
ஈரத்தின் தீரத்தில் இருக்கும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்!
முகில்

3 comments:

 1. ஈரம்
  பழி வாங்கும் ஆவி கதை. முதல் காட்சியிலேயே படத்தின் ஹீரோயின் இறந்து போகிறார். அது கொலையா? தற்கொலையா? தற்கொலை என்று போலீஸ் முடிவுகட்டும்போது அஸிஸ்டெண்ட் கமிஷனர் (அட நம்ம)ஆதி,அது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறார். அந்த மரணத்தின் மீது அவருக்கு ஈடுபாடு தோன்ற காரணம்,கொலை செய்யப்பட்டது அவரது முன்னாள் காதலி.
  விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் நகரும்போது, மேலும் சில கொலைகள் அதே அபார்ட்மெண்டில் நடக்கிறது. இந்த கொலைகளுக்கு யார் காரணம்? தும்பை பிடித்து போனால் அதன் மறு நுனியில் கிடைப்பதோ நம்ப முடியாத ஆச்சரியம்!
  விசாரணை, காதல், கொலைக்காண காரணம்... படத்தின் இந்த மூன்று அம்சங்களையும் புத்திசாலித்தனமாக இணைத்திருக்கிறார் இயக்குனர்.
  ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் நான்கும் சிறப்பாக இணைந்திருப்பது படத்தின் மற்றொரு சிறப்பம்சம். ஹொரர் படதிற்கேற்ற க்ரே நிற க்ரேடிங், படம் நெடுக வரும் மழைக்காட்சிகள் என தனியான அனுபத்தைதருகிறதுஒளிப்பதிவாளரின் கைவரிசை. அதிக பாடல் இல்லாதது ஈரத்தின் ஸ்பெஷல்.
  கச்சிதமான திரைக்கதையும்,காட்சியமைப்பும் இருந்தால் எந்த கதையையும் ரசிக்க வைக்கலாம் எனபதற்கு ஈரம் சிறந்த எடுத்துக்காட்டு. சின்ன,சின்ன நெருடல்களை களைந்தால் ஈரம் பெர்ஃபக்ட் த்ரில்லர்.

  ReplyDelete
 2. நல்லதொரு விமர்சனம். தொடர்ந்து எழுதுங்கள். தமிழ்மணம்,தமிழ்10, தமிழிஷ் ல் உங்கள் தளத்தை இனைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பதிவை இந்த உலகம் பார்க்கட்டும், படிக்கட்டும். வாழ்த்துக்கள்.
  http://www.tamilish.com/
  http://tamil10.com/submit/
  http://www.tamilmanam.net/

  ReplyDelete
 3. நன்றி திரு. ராமசாமி மற்றும் திரு. கோபிநாத். உங்கள் கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும். மேன்மேலும் தொடர்ந்து எழுதக் கோருகிறேன். ....முகில்.

  ReplyDelete

Thank you for expressing your great thoughts!