Tuesday, March 2, 2010

குட்டி... காதலின் வித்தியாசமான அணுகுமுறை


தனுஷ் ஒரு மாறுதலான ஒரு பக்கத்து வீட்டு தோற்றம் உள்ள வாலிப நாயகனாய், ஷ்ரேயா ஒரு வழக்கத்திற்கு மாறான வேடத்தில் அமைதியான ஒரு கல்லூரி நாயகியாய், ஒரு புதுமுக நாயகனுடன், கதையின் மென்மையை நம்பி மித்ரன் ஜவஹர் என்ற இயக்குநரின் பயணத்தில் துணை போயுள்ள ஒரு மாறுதலான படம்.

முன்பு மனநலம் இல்லாத ஒரு தனுஷை பார்த்திருக்கிறோம். தனுஷ் காதலியைத் துரத்துவது, தன் காதலுக்காக கொலையும் செய்வது என்ற சைகோ போல் இருந்த கதா பாத்திரத்தில் இருந்து, குட்டியில் காதலிக்காக இன்னொருவனை மணமுடித்து வைக்க முயல்வது, அந்த பாத்திரத்தில் நல்ல ஈடுபாட்டுடன் நடித்திருந்தது நல்ல முயற்சி.

குட்டி ஒரு லைட் காமெடி. கொஞ்சம் சீரியசாக கதையை காதலின் வட்டத்திற்குள் புகுத்தினாலும் வழக்கமான மசாலாவும் இல்லாமல் இல்லை. அரசியல்வாதி, அரசியல்வாதியின் பையன் ஸ்ரேயாவை காதலிப்பது, குட்டியும் அதே பெண்ணை காதலிப்பது போன்ற ஒரு மும்முணைக் காதல் குட்டியை கொஞ்சம் வழக்கமான படமாய் எண்ண வைத்தாலும் அந்த கதா பாத்திரங்களின் படைப்பு படத்தில் ரசிக்கும் படியில் காட்டப் பட்டிருந்தது.

வழக்கமாய் கத்தி எடுப்பது மாணவர்கள் அடித்துக் கொள்வது என்றிருக்கும் சிந்தனை, சற்றே மாற்றப்பட்டு இலகுவான அணுகுமுறையில் சக மாணவர்களுடன் முக்கிய நாயகர்கள் கலந்து சகஜ வாழ்கையை பிரதிபலித்தது பார்க்க ரசிக்கும் படியாய் இருந்தது.

தமிழ்ப் படம்னா பாட்டு சண்டை இல்லாம இருக்குமா? குட்டிக்கு அது ஓகே அப்படின்னே சொல்லலாம். மாணவர்கள் சாம்ராஜ்யத்தில் கலாட்டா இல்லாத ஒரு வாழ்க்கையா? திரைப்படம் கொஞ்சம் கனவு போல் இந்த விஷயங்களை உயர்த்தியே காண்பிக்கும் தண்மை இங்கு நன்றாக இருந்தது.

அடிதடி, கொலை, கொள்ளை என்று குடும்பத்தோடு பார்க்க இயலாத படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட முயற்சியான குட்டி வெகுஜன ரசனையுடன் எல்லாரையும் கவரும். குறிப்பாக இது குழந்தைகளை கதாநாயகனுடன் சேர்த்து, குழந்தைகளையும் ரசிக்க வைப்பதால், குட்டி போன்ற கதா நாயகர்கள் (தனுஷ்) குழந்தைகள் மனதிலும் இடம் பிடித்து விடுவதை பார்த்தேன்.

ஸ்ரேயா வழக்கமான காட்சி வனப்பு/ஈர்ப்பு குறைத்து கதா பாத்திரத்துடன் இணைந்து நடிக்க ஒத்துக் கொண்டது நடிப்பின் மற்ற பரிமாணங்களைத் தொட முயலும் பக்குவம்.

ஜவஹர் மித்ரனின் முயற்சி பாராட்டப் படவேண்டும். வெகுஜன ரசனையுடன் உள்ள படங்களை ஆபாசங்களைத் தவிர்த்து கொடுக்க முயன்றது ஒரு சமூக அக்கறை ஆனால் அதை முழுதும் செய்ய முடியாத வியாபாரத் துறை தமிழ் சினிமா என்று ஆங்காங்கே தெரியும் வசனங்கள், காட்சிகள் ....

காதல் பற்றி ஒரே மாதிரி கல்லூரி வாழ்வில் பார்த்த மக்களுக்கிடையில் குட்டி ஒரு வித்தியாசமான மாணவன், மனிதன் என்று காட்ட முயன்றதற்குப் பாராட்டு. கதையின் பிடிப்பிற்கு ஏற்படுத்திய வில்லனிஸம் இன்னும் சாதாரணமானதாகத்தான் இருந்தது போன்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

படப் பிடிப்புக் கலை, கலை இயக்குனரின் ஈடுபாடு மற்றும் இசை இயக்குனர் தேவி ஸ்ரீ ப்ரசாத்தின் இசையமைப்பு யாவும் நேர்த்தியாய் அமைந்து குட்டிக்கு பலம் சேர்த்துள்ளது.

கல்லூரி வாழ்க்கையின் வரிசையில் வந்த திரைப்படங்களில் பல குப்பைகளும் உள்ளன ஆனால் குட்டி ரசிக்கும்படியான ஒரு படம் என்றே சொல்ல வேண்டும்! வாழ்த்துக்கள். தற்போதைய கல்லூரியின் நடப்புகள் இளமையின் விளையாட்டான வெளிப்பாடாய் குட்டி அணைவரையும் கவர்கிறான்.