Friday, September 18, 2009

பொக்கிஷம் சேரனின் கலா முனைவு...


சேரன் உணர்வுகளின் மூலம் தன்னை நிலை நிறுத்தவும் வியாபார ரீதியாக வெல்லவும் செய்த முயற்சிகளில் ஒன்று இந்த பொக்கிஷமா என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு இயக்குனர் என்ற முறையில் தன்னையும் தனக்கு முதலீடு செய்த தயாரிப்பாளரையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஒரு புறமிருக்க கதையையும் கலா வெளிப்பாட்டு உணர்வுகளையும் சொல்ல வேண்டிய ஆதங்கமும் மற்றொரு புறத்தில் அவரை மிகவும் உந்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


நெஞ்சில் காதல் எப்படி தோன்றும் என்பதற்கு ஒரு நட்பு கூடக் காரணமாய் இருக்கலாம் என்று கடிதப் பரிமாற்றங்களின் ஸ்பரிசமாய் இந்தக் காதல் தோன்றுகிறது. மதத்திற்கும், மனித வாழ்க்கை சார்ந்த கலாச்சார, மதப் பாதிப்புகளுக்கு அப்பாற்ப்பட்டதாய் பூக்கும் ஒரு காதலை சொல்லிய விதம் மனதை சென்று அடைந்தாலும் கதையின் பின்னணியில் ஏதோ ஒரு சுகம் இல்லாத வியாபார தன்மையும் தெரிந்தது.


சேரன் இந்தப் படத்தை எவ்வளவு கோடியில் முடித்தார் என்பது தெரியவில்லை, ஆனால் இதற்க்கு கமர்சியல் அணுகுமுறை தேவை இல்லை என்றே நான் எண்ணுகிறேன். பாடல்கள் கூட அதிகம் தேவை இல்லை. உணர்வுகளை தொடும் கதையிழைப் பாடல்கள் சரி ஆனால் ஒரு படி மேலே செல்வது போல் சென்று ரசிகர்கள் எதிர் பார்ப்பார்கள் என்ற கற்பனை வடிவ பாடல்கள் வேண்டாம் என்று எண்ணினேன்.


நவ்யா நாயரிடம் நடிப்பை வாங்கிய அளவு சேரன் தன்னையும் சற்றே வேறு வடிவப்படுத்தி நடிப்பையும் கொஞ்சம் வித்தியாசமாய் கொடுத்திருக்கலாம். அவரது கதா பாத்திரத்தின் அஸ்திவாரத்தையே இன்னும் கொஞ்சம் மாற்றி இருக்கலாம். உருவத்தையும் கூட.


சமீபமாய் வந்த தொலைக்காட்சி பேட்டியில் தயாரிப்பாளர்களின் வற்புறுத்தலால்தான் தான் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டதாய் சொன்னார். உண்மையில் இந்தக் கதா பாத்திரத்தில் அவர் புது முகத்தை அறிமுகப் படுத்தி இருந்தால் படம் இன்னும் வேறு பாதிப்பை மனதில் ஏற்ப்படுத்தி இருக்கும் என்றும் கூட சொல்வேன்.


பின்னணி இசை இருந்த அளவு பாடல்கள் மனதில் நிற்க வில்லை. சபேஷ் - முரளி தனது பாடல்களை வானத்தில் இருந்து பார்க்கும் ஒரு வித்தியாசமான முறையில் பார்த்து தமக்கென்ற ஒரு பாணியை நிலை நாட்டினால்தான் நலம் என எண்ணத் தோன்றுகிறது.


கதை, கதா பாத்திரங்கள் நன்றாக மனதில் நிற்கிறது. பார்ப்பதற்கு ஒரு மென்மையான படமாய் படுகிறது. சேரத்தனம் என்ற முத்திரை அவ்வளவாக தெரியவில்லை. இப்படித்தான் இருக்கும் என்ற பழக்கத்திற்கு ஆளான ஓர் தன்மையே தெரிகிறது. சேரன் தொடர்ந்து நல்ல கதைகளை கொடுக்க முயற்சிப்பதும், நல்ல இயக்குனராய் பணியாற்ற முயற்சிப்பதும், தமிழ் திரைப்படங்களுக்கு நன்று. பக்கா கமர்சியல் படங்களுக்கு குருவாய் இருந்த்த ரவிக்குமாரின் சிஷ்யன் மனதின் ஸ்பரிசங்களை சித்திரமாய் ஆக்க முயற்சிப்பது தன்னுள் இருக்கும் ஒரு வித்தியாசமான கலைஞனை மக்களுக்கு அறிமுகப் படுத்துகிறது.


சமீப காலங்களில் தமிழ் திரைப்படம் தனக்கென்று ஒரு பாணியை கைப்பற்றும் கலைஞர்களின் அணிவகுப்பை பார்க்கிற பெருமை ஏற்ப்பட்டுள்ளது. திரைப்படங்கள் கலையின் விஸ்தாரமாய் வரும் ஒரு புதிய பரிணாமம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் நாம் இன்னும் எவ்வளவோ தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை நமது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நல்ல சினிமா ரசிகர்கள் எல்லோரும் அறிவார்கள்.


முயற்சி திருவினையாக்கும் என்பது பொய் இல்லையே!


பொக்கிஷம் காதல் என்ற உணர்வை இதயத்தில் எப்போதும் சுகந்தமாய் வீசும்!

நன்று திரு.

சேரன்... முயல்க இன்னும்!


முகில்

No comments:

Post a Comment

Thank you for expressing your great thoughts!