Friday, April 17, 2009

தரமான தமிழ் சினிமா


சினிமா பொதுவாக நம் எல்லோர் மனதையும் கவரும் கனவு வாழ்க்கை. குறைந்த பட்சம் 80 % மக்கள் சினிமாவை தம் வாழ்க்கையோடு இணைத்து கொண்டவர்கள். சிலருக்கு சினிமாவே வாழ்க்கை. சிலருக்கு அது ஒரு வழிகாட்டி. சிலருக்கு பாடம். சிலருக்கு ஜஸ்ட் பொழுதுபோக்கு . சினிமா இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று கூட கேட்கத் தோன்றும். மனிதர்கள் போல் சினிமாவும் வெவ்வேறு விதங்களாய் வருகிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனித மனங்களை கவரும் இந்த கலை மிக அற்புதமானது. எத்தனையோ கலை வடிவங்கள் இருந்தாலும், சினிமா ஒன்று மட்டும் எல்லாக் கலை வடிவங்களையும் உள்ளடக்கிய ஒரு பெருங்கலையாக உள்ளதை எண்ணிப்பார்த்தால் வியக்கத் தோன்றும். சினிமாவின் வளர்ச்சி மாறிக் கொண்டே வந்து நவீன கம்ப்யூட்டர் யுக்திகளையும் கொண்டு இப்போது சினிமாவில் செய்ய இயலாதது என்று எதுவும் கிடையாது என்பதை அழகாக சொல்லி சினிமா நம் அனைவருக்கும் கனவுலக சஞ்சாரம் செய்ய டிக்கெட் தருகிறது .

நம் மனதின் உணர்வுகளை நாம் செய்ய முடியாததை அல்லது நாம் செய்த ஒன்றை அல்லது கற்பனை பொழிவுகளை கதை வடிவில் நல்ல ரசனை உணர்வுடன் வெளிக் கொண்டு வருகையில் அந்த கற்பனை வடிவுடன் நல்ல தொழில் நுட்பம் சேர்ந்து சினிமா கலை வடிவங்களின் முடி சூடா மன்னன் போல் திகழ்கிறது.

சினிமா அதன் பின்னணியில் தன் உயிர் நாடியாய் சிந்தனாவாதிகளை கொண்டுள்ளது. தொழில் நுட்பத்தின் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு சினிமா என்றால் அது மிகையாகாது. மனிதனின் கற்பனாவளம் விஞ்ஞானத்தின் இச்சிறந்த கண்டுபிடிப்பில் கதைகளை கொண்டு சென்ற போது சினிமாவிற்கு கிடைத்த புதிய பரிணாமம் நாம் இன்று வரை அதை எங்கெல்லாமோ கொண்டு செல்ல வழி வகுத்தது.

சினிமாவிற்குள் ஓர் படைப்பாளியாய் வருவதற்கென்று எல்லாரும் வந்தாலும், பலரின் உந்துதல் சினிமாவை ஒரு பணம் பெருக்கும் வியாபாரக் கருவியை மட்டுமே இயக்குவதாய் உள்ளது. எப்படியாவது ஒரு கதையை சொல்ல வேண்டும். ரசிகர்கள் இததான் ரசிப்பார்கள் என்று அரை வேக்காட்டுத்தனத்துடன் ஏதாவது ஒரு கதையையும் கற்பனையையும் கொண்டு வரும் கதாசிரியர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பளர்களை சினிமாவும் சரி மக்களும் சரி புறக்கணித்து விடுவதை நாம் கண்கூடாக கண்டாலும் இன்னும் பலர் அந்த விக்கிரமாதித்த முயற்சியில் பலவந்தமாக இறங்கி தண்டனை அடைகிறார்கள்.

ஒரே கதை, இல்லை கொஞ்சம் மாற்றுவோம் அண்ணே... என்று பேருக்கு எதாவது மாற்றி வடைகறி போல் கதை செய்யும் கூட்டங்களை தமிழ் சினிமா விட்டால்தான் உலக அரங்கில் தமிழ் படங்களும் அதன் படைப்பாளிகளும் தவழ முடியும். தமிழன் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்று டாம்பீகமாய் பறை சாற்ற முடியும்.

மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அண்ணே என்று கதை சொல்ல கூடாது அண்ணே. ஜனரஞ்சக சினிமா எடுப்பதற்கு கொஞ்சம் புதிய கதைகளை கையாளுங்கள். புதிய ரசனைகளை உள்ளத்தை தொடும் வகையில் கதைகளாக்குங்கள். நாலு பாடல்கள், நாலு பைட், சும்மா அதிரும் அண்ணே என்று அல்வா கொடுத்தால் என்ன ஆகும்? போகப் போக ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளின் கதையாய் அழுகி அலுத்துத்தான் போகும்.

தமிழ் சினிமா மாற வேண்டும். தமிழ் மக்கள் இன்னும் விசில் அடித்துக் கொண்டு பூக்களையும் வண்ணக் காகிதங்களையும் எரிந்து அசுத்தப் படுத்தும் கூத்தை விட்டு விட்டு, வேறு வகையில் வரும் சினிமாக்களை ரசிக்க கற்றுக் கொள்ளவேண்டும். தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளையும் இயக்குனர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

தமிழின் தரம் உலகம் அறிய வேண்டும்...தமிழ் சினிமா இயக்குனர்கள் செய்யும் சிறு முயற்சிகளை இன்னும் பலப் படுத்த வேண்டும்.....

வாழ்க தமிழ்.... வாழ்க தரமான தமிழ் சினிமா!

முகில்

1 comment:

 1. தமிழ் சினிமா.....
  முன்பெல்லாம் 1960 முதல் 1970 வரையுள்ள கால கட்டங்களில் தமிழ் திரைப்படங்களில்98% வெற்றிப்படங்களாகவே அமைந்தன, காரணம் சிறந்த கதையமைப்பு, பாடல்,பாடல் வரிகள், இசை,எதார்த்தமான நகைச்சுவை எல்லாவற்றுக்கும் மேலாக குடும்பத்துடன் அமர்ந்து பார்க்ககக்கூடிய விரசமில்லா காட்சிகள் இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்...
  அந்த நாட்களில் வண்டி இளுப்பவர்கள்,மீனவர்கள்,கூலித்தொழிலாளர்கள், மற்றும் பிச்சைக்காரர்கள் ஆகியோர்கள் தங்கள் கவலைகளை ஒரு மூன்று மணி நேரம் தள்ளி வைக்க சினிமா என்னும் ஊடகம் பெரும் பங்கு வகித்தது. உலகிலேயே மனித இனத்திற்கு மட்டுந்தான் சிரிப்பு என்னும் உணர்ச்சியை இறைவன் கொடுத்திருக்கிறான். இப்போதுள்ள இயந்திர வாழ்க்கை சூழல் மற்றும் குடும்பத்திலுள்ள பனிப்போர் காரணமாக நாம் சிரிப்பை எப்போதோ தொலைத்து விட்டோம்! திரும்ப கிடைக்குமா?
  நல்ல நகைச்சுவை படங்களை தமிழ் சினிமாவில் தந்தால் தான் என் போன்றோர் முகத்தில் சில மணித்துளிகள் சிரிப்பை பார்க்க முடியும்...
  தமிழ் சினிமா வரும் காலத்திலாவது நல்ல தரமான நகைச்சுவை படங்களைத்த்ருமா?

  ReplyDelete

Thank you for expressing your great thoughts!