Saturday, January 30, 2010

தமிழ்ச் சினிமாவின் புதிய பரிமாணங்கள்...

தமிழ்த் திரைப்படங்கள் மெல்ல மெல்ல காலத்தின் நியதியை கண்டு வருகிறது என்பதில் மகிழ்வடைகிறேன். முன்பு உள்ள சினிமாக்களின் அணுகுமுறை பிரபலமான முகங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து மறுபடியும் மறுபடியும் அவர்களை மக்கள் மனதில் தெய்வத்துக்கு அடுத்த ஒரு இடத்தையும் கொடுத்து, அதில் முதலீடு செய்து தமிழ் படங்கள் ஒரு முதலாளித்துவ பாணியை வைத்ததை நாம் அறிவோம்.

T.R. மகாலிங்கம், p.u. சின்னப்பா, தியாகராஜா பாகவதர் காலம் மாறி, MGR, சிவாஜி, போன்றவர்கள் ஒரு தரம், S.S.R, ஜெய்ஷங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், போன்றவர் என்று கதாநாயகர்களில் அடுத்த படிக்கட்டு, அவர்களை சார்ந்து நகைச்சுவை நடிகர்கள், பின் வில்லன் நடிகர்கள் எனவும், கதாநாயகர்கள் விரும்பிய கதாநாயகிகள் என்றும் அவர்களை மட்டுமே நம்பி மூலதனம் செய்யும் தயாரிப்பாளர்கள் என்றும் திரைப்பட வட்டாரத்துக்குள் சாதரணமான மனிதர்கள் நுழைவது சற்றும் நினைத்து பார்க்க முடியாத காரியம்.
அது மட்டுமில்லை. இந்த கால கட்டத்தில் புதிய முயற்சிகளை எண்ணிப் பார்ப்பது என்பது இயலாத காரியம். நம் பார்முலா படங்கள் கதாநாயகர்களுக்கு மட்டுமே கதைகள் செய்வதும், அவர்கள் செய்வதை நம்ப வைப்பதுமாய் நம் படங்களும், அதை ரசிக்க நம் மக்களும் ஒரு வழிப் பயணமாய் இருந்தது...

சில படங்கள் சில நல்ல கதைகளை கையாண்டாலும், அவை கதாநாயகர்களை மையமாக வைத்தே இருக்கும் என்பதை பார்த்தால் புரியும். பொதுவாக அன்றிலிருந்து இன்று வரை கதைகள் ஹீரோக்களை பற்றியே பேசிவந்துள்ளன. நாம் அதை ரசித்து வந்துள்ளோம். இதை குற்றம் என்று சொல்லவில்லை என்றாலும், நம் கண்ணோட்டங்கள், நமது சிந்தனை, ஒரு குண்டு சட்டிக்குள் குதிரையாகவே ஓடியதாய் இருந்தது. இந்த காலகட்டத்தில், வித்தியாசமான கதையை மையமாக வைத்து, ஒரு நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துப் போன கருத்துடன் திரைப்படங்களை அறிமுகம் செய்தவர் என்றால் அது பாலச்சந்தர் அவர்கள்தான் என்று சொல்ல வேண்டும். திரு கே. பாலச்சந்தர் அவர்களின் புதிய முயற்சிகளை மக்கள் இனம் கண்டாலும், அடுத்த தழுவிய காலகட்டத்தில் மறுபடியும் தமிழ் சினிமா கமல், ரஜினிகாந்த், என்ற இன்னும் இரண்டு ஹீரோக்களை தெய்வங்களாகி கொண்டது. திரைப்படம் எடுப்பது மக்களை ரசிக்கவைப்பதுடன் வியாபார ரீதியில் வெற்றி பெறவேண்டும் என்ற உணர்வை சார்ந்திருந்தது. அது தொன்று தொட்டு இருந்து வந்த தொழில் மந்திரம் என்றாலும், கலை என்ற அடிப்படையில் சமூக ரீதியாய் திரைப்படங்கள் பெரிய பரிமாற்றங்களை கொண்டு வரவில்லை. நல்ல கருத்துக்கள் கதைகளுக்குள் இருக்கும் ஆனால் ஹீரோக்கள் செய்யும் பயணத்தில் அக்கருத்துக்கள் மறைந்து போகும் அளவு அவர்களின் உருவம் பெரிதகியிருக்கும்.

திரைப்படத்துறைக்குள் நடிகர்களாய் போவது ஒரு விண்ணைத்தொடும் முயற்சி என்றால் தொழில் நுட்பக் கலைஞர்களாய் போவது ஒரு இமாலயப் பிரயத்தனம்.
அந்தக் காலத்தில் இது ஒரு மாயக் களமாய் மக்களின் பார்வைகளில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட ஜாலக் கூடமாய் இருந்தது.

திரைப்படங்கள் என்பது ஒரு தொழிற்சாலையாய் இயங்குவது ஆனால் பொதுமக்களோ, ஆர்வலர்களோ அருகில் செல்ல இயலாத ஒன்றாய் பிரத்யேகமான ஒன்றாய் இருந்தது.

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஆபாவாணன் குழுவின் மூலம் உள்ளே நுழைந்த போது அது ஒரு மாற்றமாய் மட்டும் இல்லாமல் திரைபடத்துறையின் இயல்புகளையும் மாற்றியது. ஆபா, உதயகுமார் போன்றவர்கள் திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைத்தது புதிய தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியது. இளைஞர்களை திரையுலகம் பார்த்தது. இளைஞர்களாய் வந்தாலும், அவர்கள் எடுத்த படங்களும், வியாபார ரீதியாய் மத்துமே இருந்தன. மறுபடியும் பெரிய நடிகர்களை வைத்து இயக்கி, பணம் மற்றும் பெயர் செய்யும் யுக்திகள்தான் தொடர்ந்தது.

தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தார்கள் என்றால் அது திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றும் சொல்வது முக்கியம். ஒளிப்பதிவு, திரைக்கதைகள், அணுகுமுறை, படமாக்கும் விதம் போன்ற முயற்சிகளில் ஆர்வம் செலுத்தி திரைப்படங்களின் உருவை மாற்ற முயன்றார்கள்.

கதைக்களத்தில் பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரன் போன்றவர்கள் செய்த முயற்சிகள் ரசிக்கும் படி இருந்தது, தமிழ் ரசிகர்களை வித்தியாசங்களை பார்க்க வைத்தது. புது முகங்களை அறிமுகப்படுத்தி கதையை ஹீரோவாக மாற்றிய பெருமை ஓரளவு இவர்களை சாரும் என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது.

இந்தக் கடந்த காலகட்டங்களில் மறுபடியும் மறுபடியும் எப்படியாவது பிரபலங்கள் திரைப்படங்களில் வியாபிதிருந்தார்கள். அந்த நிலையை மாற்றிய புதிய தமிழ்ப் படங்களை பார்க்க பார்க்க நான் அதிசயிக்கிறேன். காலச் சுழற்சியில் மாற்றங்கள் தானாக வரும் என்ற உண்மை தமிழ் திரை உலகை விட்டு வைக்கவில்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் தமிழ் படங்கள் கதை களங்கள் மாறியுள்ளன. இளம் சிந்தனை வித்தியாசமாய் புது விதைகளை விதைத்தது. மரபு சார் கதைகளில் இருந்து வித்தியாசங்களைப் பார்த்தது. முக்கியமான மாற்றமாய் யாரும் அறியா புது முகங்களை கதை நாயகர்களாய் அறிமுகப்படுத்தியது மட்டும் இல்லாமல் வெற்றியையும் தட்டியுள்ளது.

மக்களின் கண்ணோட்டம் மாறிவருகிறது, தலைமுறை, சந்ததி மாற்றங்கள் என்று திரையுலகமும் ரசிகர்களும் மாறியுள்ளார்கள்.

வியாபார நோக்கு என்பது ஒரு புறம் இருந்தாலும், மாற்றங்களை எண்ணும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள், இயக்குனர்கள் வருகை தமிழ் படங்களின் சிறப்பை உயர்த்தி உள்ளது. அவர்களின் இந்த முயற்சி புதிய கலைஞர்களை தமிழ் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்க்க வசீகரமாய் இருந்த கதா நாயகர்கள் போய் ஒரு சாதாரண மனிதனாய் நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் மனித நாயகர்கள் தமிழ் திரைப்படத்திற்குள் வந்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடியாத ஒரு உண்மை. தமிழ் படங்களுக்கு இதுவே ஒரு புதிய பரிமாணம்.

இந்த பரிமாணம் நம் ரசனையை கொஞ்சம் நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப்போவதாய், வாழ்க்கையின் இயல்போடு நடை போடுவதாய் மாற்றியுள்ளது. கலையின் நிறைவு உண்மையோடு கலந்ததாய் இருந்தால் கலைக்கு பெருமை. அந்த முயற்சியில் ஈடுபட்ட, ஈடுபட்டுகொண்டிருக்கும் இந்த புதிய தலைமுறை படைப்பாளிகளின் வருகைக்கு வாழ்த்து சொல்லுவதுடன், அவர்களின் முயற்சிகளுக்கு சிகப்பு கம்பளம் இட்ட நல்ல தயாரிப்பாளர் உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

வாழ்க வாழ்க புதிய தலைமுறை எழுத்தாளர்களே ! புதிய தலைமுறை இயக்குனர்களே!

2 comments:

  1. நல்ல சிந்தனை. என்னைப் பொறுத்தவரை எப்பொழுது நாவல்கள்,கதைகள் திரைப் படமாக உருவாகிறதோ,அதை எப்பொழுது மக்கள் ரசிக்க துவங்குகிறார்களோ அப்பொழுது தான் இந்த ஹீரோயிசம் ஒழியும்.தரமான படங்கள் வரும்.நல்ல இயக்குனர்கள் உருவாவார்கள். அகத்தியன்(காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை) என்ற ஒரு அற்புதமான இயக்குனர்,தங்கர்பச்சான்(அழகி,9 ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் - நாவலில் இருந்து உருவாக்கியது) என்ற இயக்குனர் இது போன்ற சோதனையில் இறங்கி தோற்றுவிட்டார்கள். ஹாலிவுட்டில் எல்லாம் இந்த கதையைத் தான் படமாக்குகிறோம் என்று சொல்லி எடுக்கிறார்கள். இங்கு மட்டும் எப்படி வெற்றி பெறுகிறது? ஷங்கர் இப்பொழுது சுஜாதா எழுதிய தொடராக வந்த கதையை படம் எடுக்கிறார். இதிலிருந்தாவது அது தொடரட்டும். நன்றி.

    ReplyDelete
  2. நல்ல கருத்தோட்டம்! நம் வாழ்வு தொன்றுதொட்டு சிறப்பு பெற்றவர்களையே பேசியும் வாழ்த்தியும் வந்துள்ளது. பழங்காலத்தில் நாடளவில் அரசர்கள், ஊரளவில் திறமைசாலிகள், பணம் படைத்தவர்கள் என்று மக்கள் அவர்களைப் பற்றிப் பேசி புகழ் பாடியுள்ளனர். அதே பாணியை இலக்கியம், நாடகங்கள், பின் சினிமா தொடர்ந்தது. மக்களின் ஆழ்மட்ட உணர்வுகளை சினிமா தாக்கியது போல் வேறு எந்தக் கலையும் தாக்கவில்லை. சினிமா பலப்பல கலைகளின் சங்கமமாய் பெரும் பாதிப்பை பண்மடங்கு மக்களின் மனதில் ஏற்படுத்தியது. நான் சொல்ல வருவது என்னவென்றால் சினிமாவின் மூலமாக பழங்கஞ்சியை சூடாக்கி மறுபடியும் மறுபடியும் சாப்பிட்ட நாம், சினிமாவின் சக்தியை வாழ்வியல்போடு, ஒரு அக்கறையோடு, சமூகப்பிரக்ஞையோடு, கலை நுணுக்கப் பரிசோதனைக் கூடமாக மாற்ற முயல்வதை பாராட்ட வேண்டும். ஆங்கிலப் படங்களும் ஹீரோயிஸப் படங்களே. அங்கே கையாளப்படும் தயாரிப்பு யுக்திகளில், ஒரு மலைப்பு ஏற்பட்டு, அது தொழில் நுட்ப மற்றும் அணுகுமுறை, வெளிப்பாட்டு திறன் போன்றவற்றால் ஒரு தரமிக்க உற்பத்தியைத் தருகிறதே தவிர எல்லா ஆங்கிலப் படங்களும் சிறப்பானவை இல்லை. அவர்கள் எப்போதிருந்தோ வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டவர்கள். நாம் இப்போதுதான் சுவாசிக்கத் தொடங்கியுள்ளோம். ஒரு ஆங்கிலப் படம் போல் எடுக்க வேண்டும் என்று சொல்வது நம் இயல்பு. நமது திறன், தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

    அன்புடன் முகில்..

    ReplyDelete

Thank you for expressing your great thoughts!