Monday, April 20, 2009

வெண்ணிலா கபடி குழு ...மெல்லிய உணர்விழை

சராசரி வாழக்கையின் உன்னதங்களின் ஒரு பொலிவு வெண்ணிலா கபடி குழு. இயல்பான போக்கில் செல்லும் வாழ்க்கையில் உள்ள சிறந்த உணர்வு பரிமாற்றங்களை தான் உணர்ந்த விதத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

எல்லா வாழ்க்கையிலும் இழை போல் ஓடும் காதல், அது செய்யும் மாயம், உணர்வுகளின் புனிதம் என்று ஒரு அழகான கொச்சை படுத்தாத காதலாய் மாரியின் காதல். திருவிழாவிற்காக வரும் கதா நாயகி முதல் முதல் பார்த்து விரும்பிய ஒருவனை காதலனாக ஏற்கிறாள். சில நாட்களே அந்த கிராமத்தில் இருந்து விட்டு தன் காதலனை விட்டு செல்கிறாள். மறு முறை திருவிழாவிற்கு வரும் போது சந்திக்கலாம் என்று இதயத்தின் பரி பாஷைகளுடன் சென்றவள் மறுபடி வருகிறாள். காதலனை தேடுகிறாள். காதலன் இறந்து போன விஷயம் தெரியாமல் கலக்கத்துடன், குழப்பத்துடன் ஒவ்வொரு இடமாய் தேடி அவனைக் காணாமல் ஊர் திரும்பும் போது கல்லான மனதிலும் கண்ணீர் வரும்.

காதலின் புணிதமான தேடலாய் இந்த இளம் காதல் வரும் போதெல்லாம் வயதானவர்களை கூட தம் வாழ்வின் பழைய நாட்களுக்கு சென்று தாம் செய்த முதற் காதலின் புணிதத்தை உணரும் அளவிற்கு ஒரு வெளிப்பாடு இந்த காதலின் மூலம் வருகிறது .

பழனியில் வாழும் மாரி, மதுரை சென்றும் தன் காதலியை காணாமல் கபடியில் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து கொள்வது சோகமான விஷயம். இது உண்மையில் நடந்ததா சுசீந்திரன் அவர்களே? இல்லை just கற்பனையா?

கபடிதான் கதை என்றாலும், கபடி ஆடும் அந்த ஊர் வாலிபர்கள் மத்தியில் உள்ள சமூக சாயங்கள், எப்படியாவது செயிச்சு போடனுமுடே என்ற வேகம், தோற்றுக்கொண்டே வரும் அவர்களை ஏசும் கிராமம், மக்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கைகள், சாதி உணர்வின் குழப்பங்கள் என்று பல விஷயங்களையும் கதா பாத்திரங்கள் செல்லும் இயல்பு வாழ்க்கை மூலமாக சொல்கிறது வெண்ணிலா கபடி குழு.


இந்த மாதிரிப் படங்கள் தமிழ் பட முத்திரைகள் என்று சொல்லலாம். தமிழ் படங்களுக்கே உரித்தான பாடல், சண்டை இருந்தாலும், கதையோடு ஒட்டி போய் சொல்லும் போது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்.

சொல்லப்படும் கருத்து, கதையின் அமைப்பு, இந்த team work என்ற மந்திரம், தாம் சொல்ல வந்ததை அழகாக சொல்லும் பாங்கு என்று வெண்ணிலா கபடி குழு நன்றாக மனதுடன் விளையாடுகிறது.

செல்வ கணேஷ்-ன் இசை கதையுடன் இசைப்பது நன்று. கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் செவ்வனே பணியாற்றியுள்ளனர். வழக்கமான SFX filter முயற்சிகளை குறைத்து, காண்பதை நன்றாக படமாக முயற்சி செய்தது நன்று.

சுசீந்திரன் ஒரு நல்ல திரைப்படத்தின் மூலம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவரின் திரைப்பயணம் நல்ல முறையில் அமைய வாழ்த்துவதுடன், தன் பயணத்தின் மைல் கற்களாய் நல்ல கருத்துள்ள திரைப்படங்களையே அவர் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுவதுடன் அன்பு ஆணையும் இடுகிறோம்....

வெண்ணிலா கபடி குழுவுக்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

முகில்

1 comment:

  1. வெண்ணிலா கபடி குழு......
    சமீப காலமாக நான் ஆக்ஷன் படங்களையே விரும்பிப்பார்க்கிறேன் காரணம்...தற்போதைய தமிழ் சினிமாவில் கதையே இல்லாமல் வெறும் அரைத்த மாவையே திரும்ப அரைத்துத்தருகிறார்கள். மேலும், நல்ல படம் என்று பெயரைப்பார்த்து படத்தை பார்த்தால் அது டப்பிங் படமாகவுள்ளது. சற்றே மற்ற படங்களிலிருந்து மாறுபட்டது அறிமுக இயக்குனர் சுசீந்திரனின் 'வெண்ணிலா கபடி குழு'. பழைய காலத்து விளையாட்டான கபடியை மக்கள் மறந்தே விட்டார்கள் அல்லது அழிந்தே விட்டது என்றும் கூறலாம். இன்றைய இயந்திர வாழ்க்கையில் மக்கள் டென்னிஸ் விளையாட்டில் பெரிதும் நாட்டம் கொண்டுள்ளார்கள்.... டென்னிஸ் உடற்பயிற்சிக்கு ஒகே தான் என்றாலும் கபடிக்கு ஈடாகுமா?கபடி விளையாட்டின் மகிமையை டைரக்டர் கிராமத்து இளைஞன் மாரியின் வலி மிகுந்த வாழ்க்கையை சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது. கதையின் நாயகனுக்கு படிப்பில் ஆர்வம் உண்டு ஆனால், படிக்க முடியாத ஏழ்மை நிலை. கபடி விளையாட்டில் ஆர்வம் உண்டு ஆனால், விளையாட முடியாது தடுக்கும் பண்ணை வேலை. அடுத்து கண்டதும் காதல் என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும்,திருவிழாவுக்கு கிராமத்துக்கு வரும் நாயகி, நாயகனை கண்களாலேயே காதலிக்கும் இடம் நன்றாகத்தான் இருக்கிறது. ஒருவேளை நாயகனுக்கு, பெண்கள் பெரிதும் விரும்பும் 6 பேக்ஸ் இருக்குதோ என்னமோ! நான் கவனக்குறைவாக கவனிக்கத்தவறி விட்டேனோ..... சிறந்த ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியூட்டுகிறது, கதையோடு பிண்ணி வரும் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. சில காட்சிகள் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போவதால்,கொஞ்சம் சுவாராஸ்யம் குறைகிறது.
    படத்தை ஓரளவுக்கு நகர்த்திச்செல்வது மாரி+நண்பர்களின் நகைச்சுவை காட்சிகள். மாநில அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டுகிறது, திறமையான கோச்சின் கோச்சினால், மாரி அணி கோப்பையை வெல்கிறது. கோச்சுக்கு ஒரு சபாஷ்...
    மொத்தத்தில், 'வெண்ணிலா கபடி குழு' படம் பற்றி 5 வயது நந்து என்னும் சிறுமி படத்தின் கதையை என்னிடம் விமர்சனம் செய்தாள் அதுவே, அப்படத்தின் வெற்றிக்கு சான்று எனவும் கூறலாம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Thank you for expressing your great thoughts!