Wednesday, February 17, 2010

இயக்குனர் செல்வராகவனின் 1000-ல் 1-வன்


சின்னப் புள்ளைங்க படமா?


படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு கமெண்ட் வந்தது என் மனைவியிடம் இருந்து. என்ன இது சின்னப் புள்ளைங்க படம் மாதிரி இருக்குதுன்னு. நான் ஒன்னும் சொல்லவில்லை. படத்தை முழுதும் பார்க்காமல் ஏதாவது பினாத்த வேண்டாமென்கிற ஒரு பணிவோடு மரியாதை செலுத்தும் வகையில் பார்த்து முடித்தேன்.

கற்பனை வண்டியைப் பூட்டி , வரலாற்றின் இரு தமிழரசர்களை அதன் குதிரைகளாக்கி, ஒன்றுக்கொன்று முண்டும் குதிரையாய், பாண்டிய-சோழப் பகை தொடர்கிறது என்று காட்ட 21 -ஆம் நூற்றாண்டின் சினிமா என்ற சாதனத்தை வைத்து ஒரு முயற்சி செய்தால் என்ன என்று செல்வராகவன் எடுத்த கரடு முரடான முடிவாய் ஆயிரத்தில் ஒருவன் பிறந்தான் போலும்.

கற்பனையின் யுக்தியை சக்தி வாய்ந்த காட்சிகளின் மூலம் சொன்னால் ரசிகர்களை கொஞ்சம் கண்கட்டி வித்தையில் மயக்கடித்தது போல் வசியம் செய்யலாம் என்று கிராபிக்ஸின் வரம் வேண்டி செய்த சிறு தவம் ஒரு புறம் இருக்க சோழன் வியட்நாமில் இருக்கும் மிங் ஹூ தீவில் வசிக்கிறான் என்று பாண்டியப் பெண் செய்யும் பழிப்படலப் பயணத்தின் கட்டங்கள் சிறுகுழந்தையை பயமுறுத்தி இருக்க வைக்கும் திகில் முயற்சிகளாய் தெரிகிறது.

இது என்ன வரலாற்று உண்மை என்று ஏடு புரட்டி நான் பார்க்கவில்லை. செல்வா அந்த ஆராய்ச்சியை செய்திருப்பார் என்று நம்பி சோழ மன்னன் மிங் ஹூ தீவில் இருந்தாலுமே, இவர்கள் பயணத்தின் ஏழு உயிர் விழுங்கும் பயங்கரங்களை சோழ மன்னன் செய்து வைத்துள்ளான் என்று சொல்லி அதற்காக உருவாக்கப் பட்ட சில காட்சிகள் இன்னும் சீரணிக்கப் பட இயலாமல் உள்ளன.

நிகழ்கால ஆத்மாக்களாய் கார்த்தி, ரீமா சென், அண்ட்ரியா, செய்யும் பயணம்தான் கதையின் 70% திரைச்சுருள் ஓட்டம் . சோழர்களின் அட்டகாசமான வியூகங்கள் என்றும் யாரும் புக முடியாத பயங்கரங்கள் என்று சோழர்கள் தமக்கு ஏற்படுத்திய பாதுகாப்பு மற்றும் போர்ச் சிந்தனைகளை காட்டிய செல்வா, சோழ மண்டலத்தின் அரசன் இன்னும் உயிரோடு உள்ளான் என்றும் அங்கே அவர்கள் பஞ்சத்தில் வாழ்கிறார்கள் என்றும் காட்டுவது போல் உள்ளது. தமிழர்கள் இவ்வளவு கருமை நிறம் வாய்ந்தவர்களா என்று எண்ணத் தோன்றுகிறது. தனது மிதமிஞ்சிய கற்பனையின் இன்னொரு பரிமாண ஈர்ப்பிற்காக, சினிமாவிற்காக, வண்ணம் பூசிய ஒரு கரும்படையாய் தமிழர்கள்.

அது போக அவ்வளவு யுக்திகள் செய்த சோழர்கள், பாண்டியப்பெண் ரீமா சென்னின் சதியில் ஏமாந்து போய் நவீன போர் கருவிகளின் முன் சின்னா பின்னமாகிறார்கள் என்பது போல் கதை முடியும் போது, அந்த பிரமாண்டமான வியூகங்களின் பின்னணியில் இருந்த சோழர்கள் பூ.. இவ்வளவுதானா என்று எண்ணத் தோன்றுகிறது. அங்கு ஒரு வித்தியாசமான யுத்தம் நடந்திருக்கும் படி செய்திருந்தால், படத்தின் சிறப்பாய் அது அமைந்திருக்கும். இவ்வளவு கடுமையான பயணம், இவ்வளவு கடுமைக்கும் பின், ஒரு சோழ அறிவு, வீரம் என்று ஒரு போர் பட்டையைக் கிளப்பும் வகையில் இருந்தால் ஒரு பிரமாண்டமான உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும். படத்தின் உச்சகட்டம் திருப்தியை தந்திருக்கும்.

சினிமாவிற்காக சிந்திப்பது ஒரு தனித் திறமை. அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது. அதனால், செல்வாவின் சிந்தனையை நான் குறை கூறவில்லை. அவரின் கற்பனைகள் முழுமையை தரவில்லை என்றே கூற வேண்டும். எதற்க்காக அந்த மந்திரக் காட்சிகள் என்று தெரியவில்லை. அதுதான் விஷயங்களை சிறு குழந்தைத் தனமாய் மாற்றுகிறது. யாதார்த்தம் என்று போனால் அதோடு போக வேண்டும். நம்ப முடியாத விஷயங்களை நம்பும் வகையில் சொல்ல வேண்டும். சொல்லும் விஷயத்தில் ஆணித்தரமான பின்னணி பார்வையாளர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

சோழர்களின் சக்தியை, யதார்த்தத்தின் மேன்மையாய் காட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எந்த வித இயந்திரங்களும் இல்லாமலேயே, வெறும் மனித சக்தியால் வியப்பூட்டும் கோபுரங்களை எழுப்பியவர்கள் இன்னும் எவ்வளவோ சக்தி கொண்டவர்களாய் இருந்திருக்கலாம் என்று வேறு வகையில் சிந்தித்து, காட்ட வந்த பயங்கரத்தை காட்டி இருக்கலாம். கிராபிக்ஸ் ஆங்காங்கே இன்னும் சிறப்பாய் அமையாமல் கொஞ்சம் ஒரு செயற்கைத் தண்மையுடன் காட்சி தருவது தெரிகிறது. சில இடங்களில் green screen effects studio -வில் இருக்கக் கூடிய ஒரு உணர்வைத் தருகிறது.

இவர்கள் செய்த முயற்சியின் உருவம் பெரியது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் அதற்காக இந்தக் குழுவையும், தயாரிப்பாளரையும் பாராட்டி ஆக வேண்டும். குறிப்பாக ஒளி ஓவியரின் பனியின் சிரத்தை ஆங்காங்கே ஒளிர்கிறது. பாலைவனங்களை காட்டும் போது கொஞ்சம் (overexposure technics ) வெளிரும் தண்மை உஷ்ணத்தின் உணர்வை அதிகரிக்க மற்றும், பார்த்திபன் வசிக்கும் குகை மண்டபம் போன்ற இடங்களில் உள்ள ஒளியமைப்புக் கலை, போன்றவை நன்கு இருந்தது. மிக அதிகமான கோணக் குளறுபடி இல்லாமல், யதார்த்தத்திற்கு ஏற்றது போல் தன காட்சியின் தண்மைகளை ஒழுங்கு செய்தது நன்று. (Night effects ) இரவுக் காட்சிகள், கொஞ்சம் நீல வண்ணத்தை குறைத்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என்ற உணர்வு.

கலைஇயக்குனரை பாராட்டி ஆக வேண்டும். மிகவும் சிரத்தையுடன் பணியாற்றியுள்ளார். ஒப்பனைக் கலைஞர் பணியும் நன்கு அமைந்திருந்தது. அவருக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்திருந்தார். இயற்க்கைக்கு மாறுபட்ட மனிதப் பூச்சுக்கள் இருந்தாலும், இயக்குனர் கேட்டதை அவர் ஒழுங்காகச் செய்திருந்தார்.

G . V. பிரகாஷின் இசை படத்துடன் இயைந்து இருந்தது. பாடல்கள் ரசிக்கும் படியாய் இருந்தது.

நடிகராய் கார்த்தி பரவாய் இல்லை. அவருடைய பழைய மேனரிசம் இந்தப் படத்திலும் ஒட்டியுள்ளது. இன்னும் கொஞ்சம் அவரது உடல் வாகை கவனிக்க வேண்டும். கொஞ்சம் சுதப்பலா உள்ளது நண்பா. ரீமா சென் மற்றும் அண்ட்ரியா அவர்கள் பணியை ஒழுங்காய் செய்திருந்தனர். கொஞ்சம் வித்தியாசமாய் முயல்வோம் என்று, அந்த பயணத்தில் அவர்கள் பேசும் வசனங்கள், ஒருவருக்கொருவர் காட்டும் ஈடுபாடு என்று செல்வா செய்த ஒற்றை வசன ஆங்கில முயற்சி பரவாயில்லை.

எதிர்பார்த்த படி ஆயிரத்தில் ஒருவன் ஓஹோ என்று கிடையாது என்பதை பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். அது சரிதான். ஏன் அந்த உணர்வு ரசிகர்களுக்கு ஏற்பட்டது என்பதை செல்வராகவன் ஆராய வேண்டும். வித்தியாசமாய் முயன்ற உங்களுக்கு பாராட்டு உண்டு செல்வா ஆனால் கதையின் பாத்திரங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று தேவை இல்லாமல் முண்டிக் கொண்டிருந்த ஒரு தண்மை எல்லாப் பாத்திரங்களையும் ஒரே நிலையில் காட்டியது, அது அவர்களின் மீது ஒரு ஒட்டுதலை ஏற்படுத்தவில்லை. படம் எப்படி இருந்தாலும் பாடல் காட்சிகள் இல்லாமல் படத்தை எடுக்க முடியாது என்ற பார்முலா இதிலும் உள்ளது. ஒரு சீரியசான பயணத்தில் இது தேவையில்லை என்பது ஏன் உணர்வு. பார்த்திபன் தன் பாத்திரத்தை மிக நன்றாக செய்திருந்தார்.

செல்வா, உங்கள் இளம் வயதில் நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பாராட்டியாக வேண்டும். ஒரு செயல் அதன் விளைவு பின் திருத்தல் புதிய அனுபவம் இதுதான் வாழ்வியல். அது கலைக்கும் பொருந்தும். ஆகையால் வாழ்த்துக்கள். நாங்கள் c டைப் ரசிகர்களைக் கவரவேண்டும் என்று கொச்சைப் படுத்தும் சில முயற்சிகளை விட்டுவிட்டு, நம் கலாசார வட்டத்துக்குள் நல்லதை செய்யுங்கள். புதிய எண்ணங்கள் புதிய நடைமுறைகளை பலன்தரும் பாங்கில் கொண்டு வர, கலை ஒரு பெரிய ஊடகச் சக்தியாய் அமைவது என்பதை மனதில் கொள்ளுங்கள்!

ஆயிரத்தில் ஒருவன் என்ற முயற்சிக்கு வாழ்த்துக்கள். அவன் வந்து போனான் என்ற உணர்வு உள்ளது. மனதில் நிற்காத சில சலனங்களுடன் ஆயிரத்தில் ஒருவனாய் சென்றும் விட்டான்.

2 comments:

  1. நல்ல விமர்சனம். நானும் இந்த படம் பார்த்தேன். எனக்கு தெரிந்து நிறைய உதவி நடிகர்கள் நடித்து வந்த முதல் பிரமாண்டப் படம். நிறைய தமிழ் வார்த்தைகள் வழக்கொழிந்து போனதை இதில் ஞாபகப் படுத்தியிருக்கிறார்கள். படத்தில் இரண்டாம் பாகம் தான் புரியவில்லை என்று பலரும் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நான் பல காட்சிகளை ரசித்தேன்.

    ReplyDelete
  2. ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரக்கணக்கானவர்களின் 3 ஆண்டுகள் உழைப்பில் 32 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் உருவாக்கியிருக்கும் படம் என புள்ளி விபரம் சொல்கிறது.

    நீண்ட பாலைவனப்பயணம், சோழர் பரம்பரை, போர் என்று ஆரம்பம்....
    சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் ந்டக்கும் போரில் சோழன் தோற்கடிக்கப்படுகிறான். பாண்டியர்களுக்கு தேவை சோழர்களிடம் இருக்கும் பாண்டியர்களின் குலதெய்வ சிலை. சோழனோ அந்த சிலையை தனது மகனிடம் கொடுத்து சில வீரர்களுடன் பாண்டியர்கள் கையில் சிக்காமல் தப்ப வைக்கிறான்.(அது சரி ஒரு களையான முகத்தை மகனாக போடப்படாதோ!..)
    அடுத்து எனக்கு படம் பார்க்கும் சுவாராஸ்யம் குறைந்து விட்டது காரணம் ரீமாசென் காட்சியில் தோன்றியதுதான்! ஏனோ தெரியவில்லை ரீமாசென் வாயை திறந்தாலே எனக்கு வாந்திதான் வருகிறது! மக்கள் ரீமாசென்னிடம் என்ன கவர்ச்சியை கண்டார்களோ! செல்வராகவனுக்குத்தான் வெளிச்சம்...
    நான் எதிர் பார்த்த அளவு படம் இல்லாததால் முடிவை பார்க்கும் ஆர்வமும் குறைந்து விட்டது!
    என் நெருங்கிய உறவினர் ஒருவர் படத்தை தியேட்டரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் அதனால் சிடியில் பார்த்து விடாதீர்கள்! நாம் மான்ட்ரியால் சென்று தியேட்டரில் பார்க்கலாம் என்று
    சொன்னார்! சற்று நேரத்திற்கு பிறகு ஆர்வக்கோளாறு காரணமாக உடனே இரவு என்றும் பாராமல் என்னை ஆயிரத்தில் ஒருவன் சிடி வாங்கி வரும்படி செய்தார்! நானாவது முக்கால் வாசி படம் பார்த்தேன் ஆனால் அவரோ இடைவேளை வரை கூட பார்க்கவில்லை!
    செல்வராகவன் அவர்களே! இந்த படம் உங்களுக்கு ஒரு பாடம்!

    ReplyDelete

Thank you for expressing your great thoughts!