Tuesday, February 23, 2010

ரேணிகுண்டா- முள்ளும் மலருமாய்...




ஒரு வட்டச் சுழற்சியாய் கதையின் நிகழ்வு சொல்லப்படுகிறது. நாயகனாய் வரும் ஒரு டீன் ஏஜ் சிறுவனின் வாழ்வு சூழ்நிலைகளின் பாதிப்பால் எப்படியெல்லாம் மாறுகிறது என்று சொல்ல ஏற்ப்படுத்திய கதைக்களம் பல கொலைகளை நடத்தும் கொலைக்களமாகவும் உள்ளது. சிறைக்கு செல்லும் நாயகன் படும் அவஸ்தை, சிறைக்குப் பின் நடக்கும் போலீஸ் அட்டூழியங்கள், அவனை அரவணைக்கும் நான்கு சிறுவயது கொலைகாரர்கள், பின் தப்பித்து செல்லும் கொலைகார நாயகர்கள் என்று கதையின் போக்கு மேலும் கொலைகளைச் செய்யவும் பணம் சம்பாதிக்கவும் பயணம் செய்கையில் ரேணிகுண்டாவில் வாழ்க்கையை சுற்றுவதாக காண்பிக்கப் படுகிறது....

சினிமாத் தனம் என்று சொல்லக் கூடிய விஷயங்கள் தமிழ் சினிமாவை பொதுவாக ஆட்டி படைக்கக் கூடிய ஒரு கடிவாளம் என்பது வன்முறையின் அணு ஆராய்ச்சியாக ரேணிகுண்டா நாயகர்கள் மூலமும் அவர்கள் செய்யும் பகல் கொலைகளிலும் தெரிகிறது. ஒரு காட்சியின் உத்வேகம் கொடூரமாக மாற்றப்படுவது இயக்குனரின் பார்வை. அது சில இடங்களில் யதார்த்தத்தை காட்ட வேண்டும் என்ற பெயரில் அளவிற்கு அதிகமான வன்முறையின் நுட்பங்களுடன் திரையில் தோன்றுவது பல உள்ளங்களில் பார்க்க முடியாத அளவிற்கு சகிப்புத் தண்மையை சோதிக்கிறது.

கதாபாத்திரங்கள் சகஜ வாழ்வின் அடிமட்டத்தில் வசிக்கும் சகஜ மனிதர்களை கொண்டு உருவாகிய பாங்கு பாராட்டப்படுகிறது. இந்தப் பாத்திரங்களின் பின்னணியில் ஒரு சோகம் இழையோடுவது நம் மனதில் ஒரு பரிதாபத்தை உருவாக்குகிறது. எத்தனையோ மனிதர்களின் சொல்ல முடியாத சோகங்கள் இங்கே பரிமாறப்பட்டுள்ளது நல்ல முயற்சி. ஒரு இயக்குனராய் காட்சிகளை அணுகிய விதம் நன்றாக இருந்தது. பாத்திரங்களின் பண்பு என்று இயக்குனர் நேரம் செலவிட்டு முக்கியமான கதா பாத்திரங்களை வடிவமைத்தமை அவரது சிரத்தையைக் காட்டுகிறது.

கொலைகளை செய்து ஓடித் திரிந்தவர்கள் ரேணிகுண்டாவில் ஒரு சிறிய குடும்பச் சூழ்நிலையில் வாழ்வின் நல்ல அம்சங்களைக் கண்டு மனம் வாடுவதும், திருந்த முயல்வதும், இயல்பாய் இருந்தது. ஒரு காவல் துறை ஆய்வாளர் முழுச் சட்டத்தையும் கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு உயிராய் சுட்டுத் தள்ளுவது தம் படத்தின் மீதும், பாத்திரங்கள் மீதும் ஒரு பரிதாப ஈர்பிற்க்காக இயக்குனர் செய்தது போல் கதையாள்மை தோன்றுகிறது. ஒரு ட்ராஜிடி வகை முடிவு, அதன் முன் ஏற்படும் கொலை வெறி மிக்க சூழ்நிலை நடப்புகளை ஒவ்வொரு பாத்திரமும் உயிரிழக்க நேரிடும் வேகம் கதையை முடிக்க உருவாக்கிய சூசகம் போல் இருப்பது சங்கடமாய் இருக்கிறது. நல்ல முடிவு தேடும் மென்மையான உள்ளங்களுக்கு ஏமாற்றம்தான்.

நடைமுறை வாழ்வின் சோகங்கள் ஆங்காங்கே சொல்லப்படுவதும், ஒரு கொடூரமான சமுதாயத்தின் சோதனைகளையும் காட்டும் இயக்குனர், வன்முறையை வேறு வகையில் காட்ட முயற்சி செய்திருந்தால் அணைத்து தரப்பு பார்வையாளர்களையும் ரசிக்க வைத்திருக்கலாம். கொஞ்சம் அதிகபட்சமாக வன்முறை ததும்பி வழிவது மனதைப் பாதிக்கிறது.

கணவனின் தவறுக்காக தனது பெண்மையை மற்ற ஆடவர்களுக்கு அற்பணிக்கும் ஆட்டோ ஓட்டுனரின் மனைவி, தங்கையின் வாழ்வுக்காக படும் கஷ்டம், ஆணாதிக்க வாழ்வில், பெண்கள் பல சோதனைகளுக்கும் உள்ளாகித்தான் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை மனம் வருந்தி சொல்லும் இடமும், அந்த பெண்மைக்குப் பின் உள்ள தாய்மை கொலைகாரர்களாய் திரியும் நாயகர்களிடம் அன்பு செலுத்தும் இடங்களில், தெரிகிறது. கதாபாத்திரங்களை கையாண்ட முறை அந்தப் பாத்திரங்களின் மீது இயக்குனர் வைத்திருந்த ஒரு ஆர்வத்தையும் பாசத்தையும் காட்டுகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா என்று கதை செல்வதால் மொழியைக் கையாளும் சிக்கல்கள் கொஞ்சம் ஏற்படத்தானே செய்யும். ஆங்காங்கே அது தெரிகிறது. மற்ற வகையில் மாற்றுச் சினிமாக்களை அளிக்க முயலும் படைப்பாளிகளின் முயற்சியில் இதுவும் ஒன்று. கதை நன்றாக இருந்தது, சொல்ல வந்த முயற்சி நன்று, காட்சியமைப்புகள், கதையின் கள நிகழ்வுகள் என்பவை வேறு சிந்தனை வடிவாய் சில இடங்களில் இருந்து கொஞ்சம் மாற்றப் பட்டிருந்தால் இத்திரைப்படத்தின் தரம் இன்னும் உயர்ந்திருக்கலாம் என்று ஒரு எண்ணம்.

யதார்த்தமான சூழ்நிலைகளில் படமாக்கிய பாங்கு, ஒளி ஓவியரின் ஒரு செய்திப்பட நிகழ்வு காட்டுவது போன்ற ஒளிப்பதிவு, (realistic approach ) இருக்கும் வெளிச்சத்தின் தண்மையை அப்படியே உபயோகப்படுத்திக் கொண்டது போன்ற காட்சிகள் கதைக்கு மெருகூட்டுகிறது.

கலை இயக்குனரின் தொழிலும், வன்முறை விரும்பிய இயக்குனரின் பார்வைக்கு வன்மம் சேர்த்த சண்டைக் காட்சி இயக்குனரின் முயற்சியும் அவர்கள் பணியின் திறத்தை காட்டுகிறது.

இசை இயக்குனர் கணேஷ் ராகவேந்திரா ஒரு நல்ல பரிமாணத்தை கொடுத்துள்ளார். பின்னணியிலும், மெலடியிலும். அவர் தன் பயணத்தை தொடர நல்ல வாய்ப்புகள் உள்ளன.

இதுதான் கதை என்ற பின் அதை இப்படித்தான் செய்யப் போகிறேன் என்று இயக்குனர் பன்னீர் எடுத்த விளைவு இந்த நல்ல முயற்சியில் வன்முறையை சற்று அதிகம் கொட்டிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

யாரும் சீண்டாத வாழ்வியல் நாயகர்களின் மன வலிகளை கொண்டு வந்து அலசிய முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு மென்மையான காதல் ஆசுவாசப் படுத்தியது. நிறைவேறாமல் வலியையும் கூட்டுகிறது அந்த ஊமைப் பெண்ணின் எதிர்பார்ப்பு வலிகளுடன்!

திரு பன்னீர் அவர்களே, வரும் கதைகளில் மேலும் நல்ல முனைவுடன் வித்தியாசங்களை தர ஒரு தமிழ்ப் பட நேசியாய் வாழ்த்துகிறேன்!

No comments:

Post a Comment

Thank you for expressing your great thoughts!