Saturday, February 6, 2010

ஒளி ஓவியர்கள் சினிமாவின் மூச்சு...

சினிமா என்பது பல சிறந்த கலைகளை உள்ளடக்கியது. எல்லாம் ஒவ்வொரு விதத்தில் சினிமாவின் தனித்தண்மைக்கு உதவி புரிந்தாலும் சினிமடாக்ராபீ அல்லது ஒளி எழுத்தாளர்கள், அல்லது ஒளி ஓவியர்கள் அல்லது கேமராமேன் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தக் கலைஞர்களின் பங்கு மிக மிக முக்கியாமாகிறது. கதைகளையும், கருத்துக்களையும் எழுத்தாளர்கள் சிந்திப்பது போல சிந்தித்து, இயக்குனரின் சிந்தனைகளை தத்ரூபமான காட்சிகளாய் கொண்டு வருவது என்பது இவர்களின் கையில்தான் உள்ளது. ஒரு சொல் திரையில் காட்சியாக வருகிறது என்றால், இந்தக் கலைஞர்கள் இல்லாமல் இயலாது. இரண்டு மணி நேரம் ஓடி முடிந்து விடும் ஒரு படத்தை எடுத்து முடிக்க மாதக் கணக்கில் ஆகும். சில படங்களை எடுப்பதற்கு வருஷம் கூட ஆகலாம்.


இவர்களின் பங்கு ஏன் அவ்வளவு முக்கியம் அல்லது சிறந்தது என்பது கூர்மையாக கவனித்தால்தான் தெரியும். எந்த வித பரிமாணமும் இல்லாத ஒரு மட்டமான திரையில், முப்பரிமாணத்திற்கு உரிய தண்மையை உருவாக்கும் இவர்கள் திறன் ஒரு ஓவியம் வரைவது போன்ற சிறப்புடையதாகும். ஓவியக் கலைஞரும் ஒரு ஒளி ஓவியரும் ஒரே முயற்சியில்தான் ஈடுபடுகிறார்கள். ஒரு காட்சியை அழகு படுத்துவதுடன், வெறும் திரையில் ஒரு தூரப் பரிமாணத்தையும், முப்பரிமாணத்தில் நாம் காணும் கட்சிகளை திரையில் அதைப் போலவே ஒளியாலும், நிழல்களை உருவாக்குவதாலும் முப்பரிமாணத்திற்கு அருகாமையில், நமது உணர்வுகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட வேலையை கையாள்பவர்கள்.

உதாரணத்திற்கு, ஒரு நீண்ட சாலையின் விளிம்பில் சிறியதாய் ஒரு உருவம் நடந்து வருகிறது என்று எழுதி இருக்கும் காட்சி அமைப்பை ஒளி ஓவியர் எந்த நேரத்தில் படம் பிடித்தால் அந்தக் காட்சியின் அழகு கூடும் என்று எண்ணுவார். மேலும் அந்த நீண்ட சாலையை தனது காமெராவின் மூலம் எந்த வகையில் படம் பிடிக்கலாம் என்றும், அந்த காட்சியின் அழகு எந்தக் கோணத்தில் காட்டப்படும் போது, மக்களின் பார்வை வழியாய் மனதின் உள்ளுணர்வுகளில் எதிர்பார்க்கும் தண்மையை பெறவைக்க இயலும் என்றும் பல சிந்தனைகளின் பின் முடிவெடுத்து அக்காட்சியை இயக்குனரின் எண்ணங்களை திரை ஓவியமாய் படம் பிடிப்பார்.

இந்த சினிமாடாக்ராபீ என்ற கலையின் இன்னொரு முக்கியமான சிறப்பு அதை தொழில்நுட்ப மற்றும் கலைநுட்ப ஒருங்கினைவாய் செய்வது (Techno - esthetic art form) ஆகும். இந்தக் கலைஞருக்கு அறிவியல் சார்ந்த கல்வியும் கலை கண்ணோட்டமும் மிக அவசியம். ஒளி (knowledge of light properties ), ஒளியின் தன்மை (color temperature ) , ஒளியின் அளவு (intensity of light) , திரைச்சுருளின் வேதியியல் பண்புகள் (chemical properties of the film raw stock ), காமெராவின் இயந்திரப் பண்புகள் (mechanical properties of the camera , and lenses), ஒளிக்கருவிகள் (exposure control and measurement ) மற்றும் ராட்சஷ விளக்குகளின் பல பண்புகள் (giant lights) போன்றவை விஞ்ஞானத் துரையின் அறிவாகும். இவற்றை எல்லாம் சிறப்பாக கையாண்டு இவற்றின் மூலம் தன கலையுணர்வின் தனித்தன்மையை, இயக்குனரின் எதிர்பார்பிற்கேற்ப, கதையின் சிறப்பு கெடாமல் அற்புதமான காட்சிகளை கொண்டு வர ஒளி ஓவியர்கள் பிரயத்தனம் செய்கிறார்கள்.

ஒரு படத்தின் திரைக்கதை பல பக்கங்களில் இருக்கும். ஒவ்வொரு பக்கத்தின் நிகழ்வுகளும் பல காட்சிகளை படமாக்கி கோர்க்க வேண்டியதாய் இருக்கும். ஒவ்வொரு துளியாய் சேர்த்து சேர்த்து ஒரு திரைப்படம் நிறைகிறது. கதைகள் வெவ்வேறு விதமாய் இருக்கும். ஒவ்வொரு கதையின் கால கட்டம், அதற்க்கு எவ்விதமாய் காட்சிப் படபிடிப்பு, வண்ணத்தின் தன்மை, அது மனோதத்துவ ரீதியாய் நம் ஆழ் மனதில் ஏற்படுத்தும் உணர்வுச் சலனங்கள் என்று பல சீரிய ஆராய்ச்சிகளுக்குப் பின் அந்தக் காட்சியை படப்பிடிப்பு செய்கிறார் நம் ஒளி ஓவியர்.

உள்ளதிலேயே கடினமான தொழில் ஒரு ஒளி ஓவியரின் தொழில் என்றே கூற வேண்டும். ஒரு சிறு தவறு நிகழ்ந்தாலும் கூட, பல லட்சக் கணக்கில் இழப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் பல இருக்கும். மிக மிக எச்செரிக்கையுடன் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இந்தக் கலைஞர்களின் பொறுப்பில் விடப்படுகிறது.

இப்படிப்பட்ட கலைஞர்களின் சிறப்பு மெச்ச்சப்படவேண்டியதாகும். தமக்கென்று ஒரு பாணியை உருவாக்கும் ஒளி ஓவியர்கள் என மிகச் சிலரே உள்ளனர். எத்தனையோ கலைஞர்கள் இருந்தாலும் வித்தியாசமான ஒரு பங்களிப்பை தன் கலைக் கண்களின் மூலம் நமது கண்ணிற்கும் ரசனைக்கும் விருந்தளிக்கும் சிலரே சிறந்த கலைஞர்கள் என்ற பெயரைத் தட்டி செல்கிறார்கள்.

உலக ரீதியில் மிகச் சிறந்த ஒளி ஓவியர்கள் என்று பெயர் பெற்றவர்கள் இதோ!

விட்டோரியோ ஸ்டாரேரோ (Vittorio Storaro )
http://www.youtube.com/watch?v=pPhG4AxlbxY

ரோஜர் டீகின்ஸ் (Roger Deakins )
http://www.youtube.com/watch?v=agsj9pcUwLA

வெண் க்விஸ்ட் ( Sven Nykvist )
http://www.youtube.com/watch?v=CBHgY8S3OpI

வில்மஸ் சிக்மன்ட் (Vilmos Zsigmond )
http://www.youtube.com/watch?v=XUdifNdwO1g

கான்ரேட் ஹால் (Conrad Hall)
http://www.youtube.com/watch?v=mas4zNdBhzo

போன்றவர்கள் எல்லாக் கால கட்டங்களிலும் மிகச் சிறந்த ஒளி ஓவியர்களை பெயர் பெற்றவர்கள். இவர்களை போல் இதே வரிசையில் இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

இந்தியாவின் சிறந்த ஒளி ஓவியர்களாய் பலரை காணலாம். மனதில் நின்ற சில மாற்றங்களை கலையில் கையாண்டு சிறப்பு பெற்றவர்கள் இதோ!

அசோக் மேத்தா (Ashok Mehta)
பாலு மகேந்திரா (Balu Mahendra )
அசோக் குமார் (Ashok Kumar )
ஷாஜி கருண் (Shaji N . Karun )
P .C ஸ்ரீராம் (P.C Sreeram )
சந்தோஷ் சிவன் (Santhosh Sivan)
மது அம்பாட் (Madhu Ambat )
கே.வி. ஆனந்த் (K .V . Anand )

இன்னும் பலர் இருக்கிறார்கள். சிறப்பு வாய்ந்த பணியாற்றி நம்மை ஆச்சர்யப் படுத்தியவர்கள். ஒரு நல்ல ஒளி ஓவியர் உருவாக கலையுணர்வு, ஏதாவது வித்தியாசமாய் செய்ய வேண்டும் என்ற உந்துதல், நோக்கில் ஆக்கபூர்வம், அறிவுத்திறன், சீரிய சிந்தனை, போன்ற பல அடிப்படைகள் உள்ளன. அவற்றோடு தனது கலையை கையாளும் நேர்த்தியால் இவர்கள் சிறப்பு பெறுகிறார்கள்.

திரைப்படக் கலையின் ஒரு மிக உன்னதமான கலையடக்கங்களில் ஒளி ஓவியர்களின் பங்கு ஒரு தலை சிறந்த இடத்தை பெற, காகிதத்தில் எழுத்துக்களாய் குவிந்து கிடக்கும் எண்ணங்களை பிரமிப்பூட்டும் வகையில் நேர்த்தி மிகு காட்சிகளாய் தரும் அறிய காரியத்தை செய்யும் பணியே இவர்களை ஒரு படி உயர்த்தி விடுகிறது.

எல்லாக் கலைகளும் சிறப்புடையவைதான் ஆனால் ஒரு தொழில்நுட்ப மற்றும் கலைநுட்ப ஒருங்கினைவாய் இயக்கும் (Techno - esthetic art form) ஒளிப்பதிவு இயக்குனர்கள் கடமையும் பணிச்சிறப்பும் திரைப்படம் ஒரு காட்சி வழிக் கலை என்ற அடிப்படையில் அவர்களை மேன்மை படுத்துகிறது.

தமிழ் சினிமாவின் வரலாற்றில் பெயர் பெற்ற பலர் இட்ட வித்து பல புதிய சிந்தனை உள்ள இளம் ஒளி ஓவியர்களை உருவாக்கி தமிழ் சினிமாவின் பெயரை உலக ரீதியில் தலை உயர்த்திக் காட்டி உள்ளது. வரும் காலங்களில் இன்னும் வியக்க வைக்கும் கலா ஜீவிகள் வருவார்கள் என்பது நிச்சயம். தமிழ் திரைப்படக் கலையின் புகழை பரப்புவதற்கு முயலும், இன்றைய மற்றும் நாளைய ஒளி ஓவியர்கள் அனைவரையும் வாழ்த்துவோமாக!

முகில்

2 comments:

  1. ரொம்ப நல்ல பதிவு.. உங்கள் எண்ணை கொடுக்க முடியுமா?..

    ReplyDelete
  2. நன்றி, திரு J.S அவர்களே. எனது எண்ணை மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்புகிறேன்.

    ReplyDelete

Thank you for expressing your great thoughts!