Sunday, April 26, 2009

A.R. ரஹ்மான் தொட்டிருக்கும் இமயம்

ஆஸ்கர் விருது திரைப்பட வட்டாரங்களில் மிகப் பெரியதாக சொல்லப்படும் ஒரு சிகரம். இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு ஆஸ்கர் வாங்கி வந்திருக்கும் A.R ரஹ்மானைப் பாராட்டாத உள்ளங்கள் இருக்க இயலாது. அவரை திலிப் என்ற பெயரில் ஒரு சில விளம்பரப் படங்களின் தயாரிப்பின் போது பார்த்த போதே அவருள் ஒரு சிந்தனை ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஏன் இந்திய மற்றும் உலக திரைப்பட வரலாற்றில் கூட A.R. ரஹ்மான் பெயர் பொறிக்கப்பட்டது இந்தியர்கள் பலர் பெருமைப் பட்ட விஷயம். அவர் ஒரு தமிழர் என்கிற போது தமிழ் நாட்டு மக்களுக்கு, தன் வீட்டுப் பிள்ளை ஒரு பெரிய விருதை வாங்கி வந்தது போல் பெருமை என்றால் அது மிகையாகாது.

இசைக்கு ஏது மொழி என்பதை கோடம்பாக்கத்தில் இருந்து சென்று, ஹாலிவுட் இசை நிபுணர்களை சற்றே திரும்பி பார்க்க வைத்துள்ளார் நமது ரஹ்மான். இந்தியாவை ஒட்டி உள்ள ஒரு கதை என்பதால் ரஹ்மான் ஓகே என்று சிலர் எண்ணினாலும், இனி ஹாலிவுட்-ம் ரஹ்மானை அழைத்து தக்க வைத்துக் கொள்ளும் நாள் தூரத்தில் இல்லை.


இசை வரலாற்றில் தனக்கென்று ஒரு பாணியை வளர்த்துக் கொண்டவர்கள் எவ்வளவோ பேர் உண்டு என்றாலும் உலகளாவிய வகையில் இசை இமாலய சிகரத்தில் ஏறிய இந்திய இசைக் கலைஞனாய், இசை வானில் என்றும் மறக்க முடியாத துருவ நட்சத்திரமாய் ஒளி வீசும் A.R. ரஹ்மான் மேன் மேலும் சிறப்பு பெற வாழ்த்துகிறோம்.


A.R. ரஹ்மான் இட்டிருக்கும் இந்த வித்து இனி அவர் போல் பலரும் பயணம் செய்ய காத்திருக்கும் பலருக்கு ஒரு ஞான விருச்சமாய் நிழல் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது....


ஜெய் ஹோ ரஹ்மான்!


முகில்

Monday, April 20, 2009

வெண்ணிலா கபடி குழு ...மெல்லிய உணர்விழை

சராசரி வாழக்கையின் உன்னதங்களின் ஒரு பொலிவு வெண்ணிலா கபடி குழு. இயல்பான போக்கில் செல்லும் வாழ்க்கையில் உள்ள சிறந்த உணர்வு பரிமாற்றங்களை தான் உணர்ந்த விதத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

எல்லா வாழ்க்கையிலும் இழை போல் ஓடும் காதல், அது செய்யும் மாயம், உணர்வுகளின் புனிதம் என்று ஒரு அழகான கொச்சை படுத்தாத காதலாய் மாரியின் காதல். திருவிழாவிற்காக வரும் கதா நாயகி முதல் முதல் பார்த்து விரும்பிய ஒருவனை காதலனாக ஏற்கிறாள். சில நாட்களே அந்த கிராமத்தில் இருந்து விட்டு தன் காதலனை விட்டு செல்கிறாள். மறு முறை திருவிழாவிற்கு வரும் போது சந்திக்கலாம் என்று இதயத்தின் பரி பாஷைகளுடன் சென்றவள் மறுபடி வருகிறாள். காதலனை தேடுகிறாள். காதலன் இறந்து போன விஷயம் தெரியாமல் கலக்கத்துடன், குழப்பத்துடன் ஒவ்வொரு இடமாய் தேடி அவனைக் காணாமல் ஊர் திரும்பும் போது கல்லான மனதிலும் கண்ணீர் வரும்.

காதலின் புணிதமான தேடலாய் இந்த இளம் காதல் வரும் போதெல்லாம் வயதானவர்களை கூட தம் வாழ்வின் பழைய நாட்களுக்கு சென்று தாம் செய்த முதற் காதலின் புணிதத்தை உணரும் அளவிற்கு ஒரு வெளிப்பாடு இந்த காதலின் மூலம் வருகிறது .

பழனியில் வாழும் மாரி, மதுரை சென்றும் தன் காதலியை காணாமல் கபடியில் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து கொள்வது சோகமான விஷயம். இது உண்மையில் நடந்ததா சுசீந்திரன் அவர்களே? இல்லை just கற்பனையா?

கபடிதான் கதை என்றாலும், கபடி ஆடும் அந்த ஊர் வாலிபர்கள் மத்தியில் உள்ள சமூக சாயங்கள், எப்படியாவது செயிச்சு போடனுமுடே என்ற வேகம், தோற்றுக்கொண்டே வரும் அவர்களை ஏசும் கிராமம், மக்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கைகள், சாதி உணர்வின் குழப்பங்கள் என்று பல விஷயங்களையும் கதா பாத்திரங்கள் செல்லும் இயல்பு வாழ்க்கை மூலமாக சொல்கிறது வெண்ணிலா கபடி குழு.


இந்த மாதிரிப் படங்கள் தமிழ் பட முத்திரைகள் என்று சொல்லலாம். தமிழ் படங்களுக்கே உரித்தான பாடல், சண்டை இருந்தாலும், கதையோடு ஒட்டி போய் சொல்லும் போது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்.

சொல்லப்படும் கருத்து, கதையின் அமைப்பு, இந்த team work என்ற மந்திரம், தாம் சொல்ல வந்ததை அழகாக சொல்லும் பாங்கு என்று வெண்ணிலா கபடி குழு நன்றாக மனதுடன் விளையாடுகிறது.

செல்வ கணேஷ்-ன் இசை கதையுடன் இசைப்பது நன்று. கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் செவ்வனே பணியாற்றியுள்ளனர். வழக்கமான SFX filter முயற்சிகளை குறைத்து, காண்பதை நன்றாக படமாக முயற்சி செய்தது நன்று.

சுசீந்திரன் ஒரு நல்ல திரைப்படத்தின் மூலம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவரின் திரைப்பயணம் நல்ல முறையில் அமைய வாழ்த்துவதுடன், தன் பயணத்தின் மைல் கற்களாய் நல்ல கருத்துள்ள திரைப்படங்களையே அவர் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுவதுடன் அன்பு ஆணையும் இடுகிறோம்....

வெண்ணிலா கபடி குழுவுக்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

முகில்