Sunday, May 30, 2010

ஒரு இயக்குனரின் பிறப்பு...

உண்மையில் சொல்லப் போனால் நீங்களும் ஒரு இயக்குனரே! வாழ்வின் செயல்பாடுகளை செவ்வனே செய்யும் போது ஒரு நல்ல இயக்குனராகுகின்றீர்கள். அதே செயல் திறனை கற்பனையுடன் கலந்து, சினிமா என்ற ஒரு சாதனத்தின் சில வழிமுறைகளைக் கற்றுக் கொண்டால், வள்ளுவர் வாக்குப் படி "கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக" என்ற பாங்கில் திரைப்பட இயக்குனராய் பவணி வரலாம்.

கம்ப சூத்திரம் கற்க இயலாதது இல்லை. முயற்சிதான் முக்கியம். இயக்குனராய் நாம் யார் வேண்டுமானாலும் எதையும் இயக்கலாம். ஆங்கிலத்தில் இயக்கம் என்பதை மூவ்மெண்ட் (movement) என்று சொல்லுவார்கள் அல்லவா? அதே பொருள்தான் இயக்குனரின் தொழிலும்.
ஒரு கதையின் நிகழ்வை சாதுர்யமாக காண்பவரின் ரசனையைத் தொடுமளவு எப்படி அவரால் இயக்க முடியும் என்பதே இயக்கம்.

உதாரணமா ஓர் காட்சி. நீங்க  ஒரு விசயத்தை பொய் சொல்லி மறைக்கப் பாக்கிறீங்கன்னு வச்சுக்குங்க. நீங்க என்ன செய்றீங்க?

ஒத்திகை பார்த்து சில சமயம் எதிர்பாராத திருப்பம் வரும்  போது லாவகமா சிந்திக்கிறீங்க, அதுக்கு ஏத்த மாதிரி இயங்குறீங்க அல்லவா அது ஒரு இயக்குனரின் தொழில் என்று வைத்துப் பார்க்கலாம். இது ஒரு அடிப்படை.

கொஞ்சம் மாற்றி, அணுகுமுறை என்ற விதிப்படி, கற்றல் அவசியம். ஒரு ஆர்வ அடிப்படை காதல்!

முக்கியமான விசயம் இயக்குனருக்கு சினிமாவின் உள்ளே இயங்கும் பலதரப்பட்ட தொழில் நுட்பங்கள், கலைகள் போன்றவற்றை ஒரளவேனும் அறிந்து கொள்ளும் அவசியமும், இந்த இத்யாதிகளை கையாள்கின்ற நேர்த்தியும் மிக அவசியமாகிறது.

ஒரு கதையை கேட்கும் போது நம் மனதினுள் நாமே ஒரு காட்சியை உருவாக்கிக் காண்கிறோம். கதை சொல்பவர் அதற்கிடையே அவரது கற்பனை வளம், மற்றும் சங்கீத ஞானம் போன்றவற்றின் அடிப்படையில் கதை சொல்லச் சொல்ல, நமது ஆர்வம் அதிகமாகும் தன்மை போல் இயக்குனர், ஒரு கதையை தனது பங்காளிகளான தொழில் நுட்பக் கலைஞர்களுடனும், பல கலைத்துறையின் ஆர்விகளுடனும் நிஜமாய் நடப்பது போல் உருவாக்க முயல்கிறார்.

கதை உயிர் பெற்று சினிமாவின் வழியே தத்ரூபமாக காட்சி தருகிறது. கதையின் அமைப்பு, காலகட்டம், நிகழ்வின் தண்மை போன்றவை இயக்குனரின் பார்வையில் தனித்தண்மை பெற்று பல கலைகளின் உதவியுடன் ஒரு இரு பரிமாணத் திரையில் முப்பரிமாண வாழ்வு போல் நம் உள்ளத்தில் ஏற்படுத்தும் ஒரு கிரியைதான் சினிமா.

எத்தனையோ வருடங்கள் நடந்த ஒரு விடயத்தை அல்லது ஒரு மணித்துளி மட்டும் நடக்கும் ஒரு விடயத்தை திரைக்கதையின் (Screen Play), வாயிலாய் சிந்தையைக் கவரும் வகையில் படமாக்கலாம்.

இயக்குனர் ஆகும் போதே, தனக்கு என்று ஒரு தனித்தண்மையை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் இயக்குனர்களுக்கு வேண்டும். (School of thought), சார்பு வழிப் பயிற்சி என்ற அடிப்படையில் ஒருவரிடம் உதவியாளராய் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் அவரது குருவின் சிந்தனை வழியைப் பின்பற்றி விடுதல் இயல்பு எனினும், சுயமாய் சிந்தித்து வித்தியாசத்தைக் காட்டும் சிறப்பு இயக்குனராய் வரவேண்டும் என்று கருவில் இருக்கும் சிசுவாய் இருக்கும் புது இயக்குனர்களுக்கு பொருந்த வேண்டும்.

எல்லாருக்கும் எல்லாவற்றையும் செய்யும் பாங்கு அமைவது கடினம். என்னடா இவன், நீங்களும் இயக்குனர்தான் என்று சொல்கிறானே அது எப்படிச் சரியாகும் என்று ஒரு தாழ்வு மனப்பாண்மையுடன் உங்களைப் பார்க்க வேண்டாம். உண்மையில் முயற்சி திருவிணையாக்கும் என்ற சொல் எக்காலத்திற்கும் உரியது. நம்மில் பலர் முயல்வதை விட்டுவிட்டு, குறை சொல்வதற்கெனவே பிறந்திருக்கிறோம். ஆனால் ஒரு இயக்குனரின் பிறப்பு நல்ல முயற்சியில் அமைவதே.

நிறையப் படியுங்கள். புத்தகம் படிக்கவில்லை என்றால் வாழ்க்கையைப் படியுங்கள். ஒரு நிகழ்வின் தாக்கம் மனநிலையை எப்படிப் பாதிக்கிறது என்ற பக்குவத்தை உணர்வு பூர்வமாக உணருங்கள். எழுதிப் பழகுங்கள்.
ஒரு சாதாரண வீடியோ கேமராவை வைத்து ஒரு சிறு நிகழ்வையோ கதையையோ படமாக்குங்கள்.  வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் நண்பர்களின் உதவியைப் பெறுங்கள். உதாரணத்திற்கு, இசையில் ஆர்வம் உள்ள நண்பர், நடிப்பதில் ஆர்வம் உள்ளவர், கலையில் ஆர்வம் உள்ளவர், படத்தொகுப்பில் ஆர்வம் உள்ளவர் என மற்றவர் உதவியுடன் அக்கதையையோ நிகழ்வையோ மனதில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் படமாக்க முயலும் முதல் முயற்சி நீங்கள் ஒரு இயக்குனராய்ப் பிறக்க வழி செய்யும்.

அத் திரை முயற்சியை எல்லாருக்கும் காட்டி அவர்களின் மனதில் எந்த பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்று அறியுங்கள். அதன் மூலமே நீங்கள் உங்களின் செயல்திறனை மதிப்பிட முடியும். யாராவது சரியில்லை என்றாலும், உங்களுக்கே சரியாய் வரவில்லை எனத் தோன்றினாலும் மறுபடியும் முயலுங்கள்.

ஒரு இயக்குனர் முயற்சியில்தான் உருவாகுகிறார். ஒரு சாதாரண மனிதன் இயக்குனராய்ப் பிறக்க ரசனையும் பயிற்சியுமே தேவை!

ரெடி, ஸ்டார்ட் கேமரா, ஆக் ஷன், டேக் ஓகே என்று நீங்கள் சொல்லும் காலம் விரைவிலேயே வரலாம்.

No comments:

Post a Comment

Thank you for expressing your great thoughts!