
காதலுக்கும் வாழ்க்கைக்கும் நடக்கும் போராட்டத்தின் வலி நெஞ்சை உருக வைக்கிறது ராஜ மோகன்! ஒரு திரைப்படம் மூலமாக உங்கள் உணர்வுகளை முடிந்த வரை களங்கம் இல்லாமல் சொல்ல முயற்சித்ததற்கு முதற்க்கண் நன்றி. கதா நாயகர்களாய் பாத்திரங்களின் சொருபங்களை இயற்கையான வழி முறையில் கிராமத்தில் பார்க்கக் கூடிய சராசரி முகங்களை தேர்ந்தெடுத்து கதைக்கு பலம் சேர்த்த முயற்சிக்கும் வாழ்த்துக்கள். இந்த மாதிரி முயற்சிக்கும் ஊக்கம் கொடுத்து உங்கள் குழுவிற்கு இப்படத்தை உருவாக்க உதவி செய்த திரு S.P.B குடும்பத்திற்கு பாராட்டுக்கள்.
ஒவ்வொரு மனித வாழ்விலும் உள்ள சோகங்கள் எல்லாம் நமது நடை முறை வாழ்வில் வருந்தி மறந்து விடுவதுதான். ஆனால் காதல் தோல்வியும், அதனால் ஒரு எதிர் காலத்தையே இழந்து விடும் துர்பாக்கியமும் பெரும் வழியையும் வடுவையும் ஏற்ப்படுத்தி விடுவது என்பது உங்கள் படத்தின் மூலம் சொல்லப் பட்டிருகிறதை அது சொல்லப் பட்ட விதத்தை பாராட்டாமல் இருக்க இயலாது.
முட்டத்திலும், தூத்துக்குடியிலுமாய் வாழ்க்கையை தத்ரூபமாய் காட்டி உள்ளீர்கள். நீர் அந்த ஊரை சேர்ந்தவரோ என்று கூட எண்ணம் வருகிறது. ஒரு நல்ல எதிர் காலத்தை அமைத்துக் கொள்ள இயலாமல் துளசி போன்ற இளம் பெண்கள் வாழ்க்கையின் அகோரப் பிடிகளில் சிக்கி எப்படியெல்லாம் கருகிப் போகிறார்கள் என்ற ஒரு வலியே என் இதயத்தில் ஓர் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. கூச்சன், துளசியின் கொச்சை இல்லாத காதல், மனதை இளக்கியது.
அந்த சில முத்தக் காட்சிகளை கூட நீங்கள் தவிர்த்திருக்கலாம். எனென்றால் உங்கள் கதையின் பின்னணியில் உள்ள அழகே போதுமானதாய் இருந்திருக்கும்.
சித்தார்த்தின் படப்பிடிப்பு, படத் தொகுப்பாளரின் கை வண்ணம், யுவன் இசைஅமைப்பு, எல்லாம் படத்திற்கு வேண்டிய அளவு நல்ல முயற்சிகளாய் இருந்தது. யுவனின் பின்னணி இசை மிகவும் அழகாக சில இடங்களில் உதவியுள்ளது .
சில மாற்றங்களை கதையில் செய்திருக்கலாம்.
- எந்தப் பிரச்சனை என்றாலும் வாய் திறக்காமல் இருக்கும் கிராமக் கூட்டம். அது பொதுவாய் அப்படி இருக்காது.
- தர்மன் கதா பாத்திரத்திற்கு உள்ள பாடல்.
- ஒரு நாள் முழுக்க முட்டம் பஸ் ஸ்டாண்டில் இருக்கும் துளசி மற்றும் பாட்டிக்கு ஒரு கிராமத்து ஜனம் கூடவா கூச்சன் விபத்து பற்றி சொல்லாமல் விட்டிருக்கும்?
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் என்ற தலைப்பிற்கு என்ன காரணம் என்று தெரிய வில்லை. ஒரு உண்மை சம்பவம் நடக்கும் இடத்தில் இருந்தது போன்ற ஒரு உணர்வை உங்கள் படம் கொடுத்தது. சில படங்கள்தான் மனதில் ஓர் திருப்தியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். உங்கள் படம் என் மனதை உண்மையில் தாக்கி ஒரு வலியையும் ஏற்படுத்தியது. ஒரு கலைஞனின் படைப்பு ஓர் உள்ளத்தை சென்றடையும் விதம் அக்கலைக்க்கு பெருமை சேர்க்கும். அவ்வழியில் உங்களுக்கும், உங்களுடன் பணி புரிந்து உங்கள் படைப்பிற்கு உருவம் அளித்த குழுவிற்கும் வாழ்த்துக்கள். வெல்ல வாழ்த்துக்கள். நற்ப் படங்களை மேலும் படைத்திட வாழ்த்துக்கள்.
முகில்